ஈழ இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரா? அதில் மறைந்திருக்கும் உண்மை என்ன என்பது குறித்து அந்த அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளராக பணியாற்றிய தயாமோகன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தந்தி செய்தி தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ”பிரபாகரன் இப்போது உயிரோடு இருக்கிறார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவர் மே18ஆம் தேதிக்கு பின்னர் கொல்லப்பட்டார் என இன்னொரு தரப்பினர் சொல்கின்றனர்.
தளபதி சூசை அண்ணன் சொன்னது…
ஆனால் அப்படியல்ல. இந்த விசயத்தில் எனக்கு சொல்லப்பட்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மே 14 மற்றும் 16 இரவு என சிங்கள ராணுவத்தின் முற்றுகை உடைப்புக்கான இறுதிக்கட்ட முயற்சியில் விடுதலை புலிகள் தீவிரம் காட்டியது. அப்படி 16ஆம் தேதி பின்னிரவில் நடந்த தாக்குதலில் எங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படவில்லை. எங்களுக்கும் ராணுவத்திற்கும் இடையேயான தூரம் குறுகிவிட்டது.
நான் நேரடியாக அந்த களத்தில் இல்லை. எனக்கு பொறுப்பாளராக இருந்த நடேசனுக்கு அழைத்தேன். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. அதனால் தமிழீழ கடற்படை தளபதி சூசை அண்ணனிடம் மே 17ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அவர் “நான் தலைவரின் வீரச்சாவு குறித்து தமிழீழ வெளிவிவகார செயலர் குமரன் பத்மநாபன் (கே.பி) மற்றும் ராமிடம் எல்லா விடயங்களையும் (தகவல்கள்) சொல்லிவிட்டேன்” என்று சொன்னார்.
இதுதொடர்பாக ராமிடம் பேசியபோது, “தலைவரின் வீரச்சாவை எல்லோரிடம் கதைத்த (பேசிய) பின்பு சொல்ல முடியும். எனவே நீயும் செய்தி நிறுவனங்களுக்கு அதுகுறித்து தெரிவிப்பதை தவிர்த்துக்கொள்” என்று அறிவுறுத்தினார்.
பின்னர் எனக்கு சிலர் அளித்த தகவலின்படி, ”எதிரிகள் அருகில் நெருங்கியபோது, தலைவர் பிரபாகரனின் துப்பாக்கியில் தோட்டாக்கள் எல்லாம் தீர்ந்தபின்னர், அவர் தனது கைத்துப்பாக்கியால் சுட்டு உயிர் மாய்த்துக் கொண்டார்” என கூறினர்.
சிங்கள அரசின் சதி!
தலைவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து சூசை அண்ணன் எனக்கு சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை மே 17ஆம் தேதிக்கு முன்னதாகவே தலைவர் உயிரிழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு முன்னதாகவே சூசை இதுதொடர்பாக பல இடங்களில் இருக்கக்கூடிய பொறுப்பாளர்களுடன் பேசியிருக்கிறார். மே17ஆம் தேதி ஆயுத அவனிப்பை சிங்கள ராணுவம் அறிவித்துவிட்டது. அந்த அறிவிப்பு வந்தது தலைவரின் வீரச்சாவிற்கு பின்னர், 17ஆம் தேதி இரவு சிங்கள ராணுவம், ”நாளை (மே 18) வெற்றி நாளாக கொண்டாடப்படும்” என மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது.
அந்த தேதியையே இனபடுகொலை நாள் என பிரகடனப்படுத்தி எங்களின் தமிழீழ இளம் தலைமுறைகள் அதனை அனுசரிப்பதை நீர்த்துப் போக செய்வதற்காகவே மே 19ஆம் தேதியன்று தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இது தலைவர் மீதான நன்மதிப்பை கெடுப்பதற்காக இலங்கை அரசு செய்த சதி என்பதை நாங்கள் ஆணித்தரமாக சொல்லமுடியும்” என தயா மோகன் தெரிவித்தார்.