நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்த படங்களில் அவர் அடிக்கிற ‘காமெடி லூட்டி’கள் ரொம்பவே பிரபலம்.
அதுவும் கவுண்டமணி உடன் அவர் நடித்த படங்கள் இன்றும் நம் வயிற்றைப் பதம் பார்க்கும் ரகத்தில் இருந்து வருகின்றன. அந்தளவுக்கு அவை நம்மைச் சிரிக்க வைக்கின்றன. சில வேளைகளில் அந்த கிண்டல் ‘டமார்’ ‘டூமீர்’ என்று நாம் கொண்டிருக்கிற சில பிம்பங்களையும் சுக்குநூறாக்கும். அது போன்ற கிண்டலை மேடைகளிலும் அவ்வப்போது வெளிப்படுத்துவார் சத்யராஜ். கடந்த காலத்தில் அவற்றில் சில சர்ச்சைகளாக உருவெடுத்திருக்கின்றன.
அப்படியொரு விஷயம் நிகழ்ந்துவிடுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது சமீபத்தில் நடந்த ’திர்பனதாரி பார்பரிக்’ தெலுங்கு பட பத்திரிகையாளர் சந்திப்பு.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சத்யராஜ் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
’பாகுபலி’ கட்டப்பா மாதிரியான பாத்திரங்களில் நடித்த நீங்கள் இது போன்ற சிறு பட்ஜெட் படத்தில் இடம்பெற்றது ஏன் என்ற கேள்விக்கு, இனி வரும் நாட்களில் இது போன்ற படங்களில் இடம்பெறுவதையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார் சத்யராஜ்.
பின்னர், ஒரு படத்திற்காகத் தயாராவதில் ‘பட்ஜெட்’ ஏதேனும் உங்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘எனக்கு பெரிய பட்ஜெட், சிறு பட்ஜெட் படங்கள் எல்லாமே ஒன்றுதான்’ என்று பதிலளித்தார்.
கூடவே, ‘பெரிய பட்ஜெட் படங்களில் எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். அதுதான் வித்தியாசம்’ என்றார். சிக்கந்தர், கூலி படங்களுக்கு வாங்கிய சம்பளத்தை விடக் குறைவாகவே ‘திர்பனதாரி பார்பரிக்’ போன்ற படங்களுக்கு வாங்குவதாகக் கூறினார்.

தொடர்ந்து அக்கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பேசியவர், “கதை சார்ந்த படங்கள் தான் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும்” என்று தெரிவித்தார்.
“பெரிய பட்ஜெட் படங்களில் ஹீரோவின் சம்பளம் ‘பெரிதாக’ இருந்தால் குணசித்திர நடிப்புக் கலைஞர்களுக்கான முக்கியத்துவம் படத்தில் ‘மிகச்சிறியதாக’ இருக்கும் என்று ‘சைகை’ மூலமாக வெளிப்படுத்தினார்.
“எல்லா கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களும் ஹீரோவைப் புகழ்ந்தே பேச வேண்டியிருக்கும். ‘அவனோட கண்ணுல என்னோட சாவைப் பார்த்தேன்’ என்று முதல் ரீலிலேயே ஹீரோ பற்றி வில்லன் வசனம் பேசுவார். பிறகு, 13வது ரீல் வரை வில்லனால் அந்தக் கதையில் என்ன பயன்” என்று தனது ‘ஸ்டைலில்’ நக்கலடித்தார் சத்யராஜ்.
அந்த பேச்சு தொடர்பான வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் சிலர், ‘பெரிய பட்ஜெட் படம் என்று கூலியைத் தான் சத்யராஜ் கிண்டலடிச்சிருக்காரா’ என்று சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.