நடிகர் விக்ரமின் முதல் படம் அக்டோபர் 17 தீபாவளியன்று வெளியான நிலையில், அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரமின் பைசன் திரைப்படமும் 35 வருடம் கழித்து அதே தேதியில் நாளை (அக்டோபர் 17) ரிலீசாக உள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் துருவ் விக்ரம். அனுபமா பரமேஷ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.
நடிகர் விக்ரமின் மகனான துருவ், ஏற்கெனவே ஆதித்யா வர்மா, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், ‘இப்படம் தான் தனது முதல் திரைப்படம்’ என அறிவித்திருந்தார்.
ஆதித்யா வர்மா ரீமேக் படம் என்ற நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த மகான் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். எனவே நேரடி தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள பைசனை தான் தனது முதல் படம் என கூறி விளக்கம் அளித்திருந்தார். இதனை நடிகர் விக்ரம் மற்றும் அவரது ரசிகர்கள் வரவேற்று கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக மற்றொரு தகவலும் இப்போது வந்துள்ளது.
அதாவது துருவ்வின் தந்தையும் நடிகருமான விக்ரம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் ’என் காதல் கண்மணி’. இப்படம் 1990ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி ரிலீசானது.
இந்த நிலையில் தற்போது 35 வருடங்கள் கழித்து அதே தேதியில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படமும் ரிலீசாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.