பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க மகேந்திர சிங் தோனி இன்று (அக்டோபர் 9) மதுரைக்கு வருகை தந்தார். அவருக்கு விமான நிலையமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது மதுரை. கோயில் நகரம், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மாநகரமான மதுரையில், சென்னைக்கு அடுத்தப்படியாக மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது.
மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகே 11.5 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவியுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ.350 கோடியில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளது.
இந்த மைதானத்தை இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வந்தடைந்தார்.
அவர் வருவதை முன்கூட்டியே அறிந்த ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர் காரில் ஏற, விமான நிலைய முகப்புக்கு வந்தபோது, அங்கிருந்தவர்கள் ‘தோனி, தோனி… தல… தல…’ என உற்சாக குரலெழுப்பி வரவேற்றனர்.
அதனை ஏற்று ரசிகர்களுக்கு கைக்காட்டியபடியே வெளியே வந்த தோனி, காரில் ஏறி மைதானம் நோக்கி புறப்பட்டு சென்றார்.