தமிழ்நாடு சட்டமன்றத்தில்… மன்னிப்பு கேட்டு மீண்டும் சர்ச்சையாக பேசிய தர்மேந்திர பிரதான்

Published On:

| By Kavi

Dharmendra Pradhan controversial speech

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தவறாக நடத்தியதாக ராஜ்ய சபாவில் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு, அவையிலேயே திருச்சி சிவா கண்டனம் தெரிவித்தார். Dharmendra Pradhan controversial speech

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக நேற்று மக்களவையில் திமுக எம்.பி.க்களுக்கும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது. தமிழக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள் என்று தர்மேந்திர பிரதான் கூற, அதற்கு எம்.பி.கனிமொழி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

எனினும் இன்று (மார்ச் 11) நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய தர்மேந்திர பிரதான், “என்னுடைய அம்மா கூட தமிழ்நாட்டை பாரம்பரியமாக கொண்டவர். நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, மற்றொரு கனிமொழி (கனிமொழி சோமு) இருவரும் எனது சகோதரிகள். எனது வார்த்தைகள் அவர்களை புண்படுத்தியிருந்தால் 100 தடவை கூட மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதில் எந்த கவுரவ குறைவும் எனக்கு கிடையாது” என்றார்.

மத்திய அரசு தரப்பில் இருந்தும் தமிழ்நாடு முதல்வர் தரப்பில் இருந்தும் 13 முறை தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக கடிதம் வாயிலாக பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன என்று தெரிவித்த தர்மேந்திர பிரதான், “பிரதமர் மோடி எங்களுக்கு எல்லாம் ஒரு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். இந்தியாவில் பிற மாநில மொழிகளிலும் வெளிநாட்டு மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க சொல்லியிருக்கிறார். தமிழ் மொழி தொன்மையான மொழி என்பதை மறுக்கவில்லை. தமிழ் எல்லோருக்குமான மொழி” என்று குறிப்பிட்டார்.

பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு யாரும் பாடமெடுக்க தேவையில்லை என்று தெரிவித்த தர்மேந்திர பிரதான், “சிறந்த பெண் தலைவரான ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் என்ன நடந்தது எல்லோருக்கும் தெரியும். அதை மறுக்க முடியாது. அவர்கள் எனக்கு பாடமெடுக்கிறார்களா?” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே,

இதற்கு திமுக எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பினர். தர்மேந்திர பிரதான் சம்பந்தமில்லாமல் பேசுவதாக கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு தர்மேந்திர பிரதான், இதுதான் உண்மை… அதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

ஜெயலலிதா குறித்து தர்மேந்திர பிரதான் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Dharmendra Pradhan controversial speech

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share