இது ‘பீல்குட் மூவி’யா?!
தமிழில் பாக்யராஜ், பாண்டியராஜன், டி.ராஜேந்தர், பார்த்திபன் என்று வெகு சிலரே தாம் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்றவர்கள் அம்முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னொருபுறம் நாயகர்களாக விளங்கிய சிலர் நடிப்பைத் தாண்டி தமது திறமைகளை வெளிக்காட்ட அல்லது இதர சில காரணங்களுக்காக இயக்குனர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், அர்ஜுன், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என்று அந்தப் பட்டியலும் கொஞ்சம் பெரியதுதான். அந்த வரிசையில் இடம்பெறுகிற இளைய நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ்.
பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களைத் தொடர்ந்து நான்காவதாக அவர் தந்திருக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’. மூன்றாவது படம் தவிர மற்றனைத்திலும் அவர் நாயகனாக அல்லது ஒரு பாத்திரமாக இடம்பிடித்திருக்கிறார்.
‘இட்லி கடை’ திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் ஒருசேரத் தனுஷ் வெற்றி பெற்றிருக்கிறாரா?
’சிம்பிள்’ கதை!

‘இட்லி கடை’ படத்தின் கதையும் சரி, கதாபாத்திரங்களும் சரி; மிக எளிய வார்ப்பில் அமைந்திருக்கின்றன.
அமைதியும் இனிமையும் மிக்க கிராமத்திலேயே வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்கிற பெற்றோரின் ஆசையைப் புறந்தள்ளிவிட்டு, பணம் சம்பாதிக்கிற வேட்கையில் வெளியூருக்குப் புறப்படுகிறார் ஒரு இளைஞன். சென்னை, பாங்காக் என்று அவரது பயணம் அமைகிறது.
அந்த இளைஞனின் தாய் தந்தையோ ‘தாங்கள் நடத்தி வரும் இட்லிக்கடையைத் தங்களுக்குப் பின்னர் மகன் நடத்த வேண்டும்’ என்று பிரியப்படுகின்றனர். ஆனால், அவரோ அவர்களைத் தவிக்க விட்டுவிட்டு வேறு ஊரில் வாழ்ந்து வருகிறார்.
பாங்காக்கில் அவர் வேலை செய்யும் ஹோட்டல் உரிமையாளருக்கு ஒரு மகன், மகள். அந்தப் பெண் இந்த நபர் மீது காதல் கொள்கிறார்.
இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
அந்த இளைஞர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவரது பெற்றோர் கிராமத்திலிருந்து விமானம் ஏறி பாங்காக்கில் நடைபெறுகிற திருமணத்தில் கலந்துகொள்ளத் தயாராக இல்லை.
இந்த நிலையில், அவரது தந்தை திடீரென்று மரணமடைகிறார்.
அதனைக் கேட்டதும், ‘கல்யாணத்தை தள்ளி வைப்பது முடியாத காரியம். எப்படியாவது இறுதிச்சடங்குகளை முடிச்சுட்டி திரும்ப வந்துருங்க’ என்று மருமகனாக வரப் போகிறவரிடம் சொல்லி அனுப்புகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளர். தங்களிடம் வேலை செய்கிற நபரை அவருடன் அனுப்பி வைக்கிறார்.

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபிறகு, அந்த இளைஞரை இன்னொரு இடி தாக்குகிறது. அவரது தாயும் மரணிக்கிறார்.
அடுத்தடுத்தாற்போல நிகழ்ந்த இரண்டு துக்க நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறபோது, ‘இப்போ பாங்காக் வரப்போறியா இல்லையா’ என அந்த நபரை அடித்து இழுத்துச் செல்லத் தயாராகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன்.
சிறு வயது முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவருக்கு, இதர மனிதர்களைப் பற்றியோ, அவர்களது மனநிலை பற்றியோ துளியும் அக்கறை கிடையாது. அதனை நன்கு தெரிந்து வைத்திருந்த அந்த இளைஞர் என்ன செய்தார்?
தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு அவர் வெளியேறினாரா? அந்த ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகளும் இந்தியா வந்தனரா? அந்த கிராமத்தினர் அந்த இளைஞருக்கு ஆதரவாக நின்றார்களா என்று சொல்கிறது ‘இட்லி கடை’ படத்தின் மீதி.

இந்தக் கதையில் பிரதான பாத்திரங்கள் அனைத்துமே தெளிவாக வார்க்கப்பட்டிருக்கின்றன. நாயக பாத்திரம் மட்டுமே சிறிது குழப்பமானதாகக் காட்டப்பட்டுள்ளது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ரொம்பவே சுயநலமானதாகத் தெரிகிறது. அதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருந்தால், இந்த ‘இட்லி கடை’ இன்னும் சுவையானதாக மாறியிருக்கும்.
இயக்குனராக ஜெயித்த தனுஷ்!
தொடக்கத்தில் வரும் அரை மணி நேரக் காட்சிகள் வழியே, ‘என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்’, ‘இதுதான் நானா’, ‘இவ்வளவு சகிப்புத்தன்மைக்குப் பின்னால் இருப்பது பணம் மீதுள்ள வேட்கையா’ என்கிற கேள்விகளைத் தனது நடிப்பில் வெளிக்காட்டுகிறார் தனுஷ். ஆனால், படம் முடிந்தபிறகே அந்த பாவனைகளுக்கான பொருள் பிடிபடுகிறது.
போலவே, நித்யா மெனனின் இருப்பு தொடக்கத்தில் செயற்கையாகத் தெரிகிறது. மெதுவாக, அவர் திரைக்கதையில் ஒரு அங்கமாக மாறுகிறார். திருச்சிற்றம்பலம், தலைவன் தலைவி போன்ற படங்களில் தொடக்கம் முதலே தனது இருப்பை அவர் நிலைநாட்டியிருப்பார்.
இது போன்ற குறைகள் இப்படத்தின் நாயகன், நாயகி பாத்திரங்களில் தென்படுகின்றன.

இன்னொரு நாயகியாக இதில் ஷாலினி பாண்டே வருகிறார். அவரது பாத்திர வார்ப்பில் குறைகள் இல்லை என்றபோதும், திரைக்கதையில் போதுமான இடம் அவருக்குத் தரப்படவில்லை.
இந்த படத்தில் ராஜ்கிரண், கீதா கைலாசம் பாத்திரங்கள் மிக எளிமையாக வார்க்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நியாயம் சேர்க்கிற வகையில் அவர்களும் படத்தின் அங்கமாக மாறியிருக்கின்றனர்.
அருண் விஜய் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆனால், அவரை ஓரம் கட்டுவது போன்று ‘கிளாஸ் பெர்பார்மன்ஸ்’ தந்திருக்கிறார் சத்யராஜ். சமீபகாலமாக அவர் நடித்த படங்களில் இதுவே ‘பெஸ்ட்’

.
இவர்கள் போக இளவரசு, இந்துமதி, நரேன், சமுத்திரக்கனி, போலீஸ்காரராக வரும் பார்த்திபன், இட்லி கடைக்கு வரும் தாத்தா, ஊர்காரர்களாக வருபவர்கள் என்று பலர் இதிலுண்டு.
கீதா கைலாசம், ராஜ்கிரண் பாத்திரங்களின் இளம்பிராயத்தைக் காட்ட பிரிகிடாவும் ஒரு இளைஞரும் நடித்துள்ளனர். அவர்களோடு வடிவுக்கரசியும் இடம்பிடித்திருக்கிறார். அவர்கள் வருகிற காட்சிகளை இன்னும் கொஞ்சம் விலாவாரியாக காட்டியிருக்கலாம்.
இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ்.
நீண்ட காலம் கழித்து தனது குடும்பத்தினரை இளவரசு பாத்திரம் சந்திக்கிற காட்சி, கன்றுகுட்டியாய் தந்தையே பிறந்திருப்பதாக தனுஷ் உணரும் காட்சி, வில்லனிடம் காசு வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பாத்திரம் தனுஷ் கடையை காலி செய்ததா இல்லையா என்பதைச் சொல்லும் காட்சி என ‘இட்லி கடை’யில் வரும் சில காட்சிகள் நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. நம்மையும் அறியாமல் கண்களில் நீரைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன.
அந்த வகையில், சுமார் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களைக் குறிவைத்து ஒவ்வொரு பிரேமையும் இழைத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.

வில்லன் வசிக்குமிடத்தைச் சுற்றி வளைத்த ஊர் மக்கள் ‘நாங்க உள்ள வந்தமா, உள்ள வந்தமா. அதே நேரத்துல நீங்களும் வெளியே போக முடியாது’ என வில்லனின் அடியாட்களை மிரட்டுகிற இடத்தில், தியேட்டரில் விசில் சத்தம் அள்ளுகிறது.
இப்படித் தேவையான இடங்களில் ‘ஹீரோயிசம்’ புகுத்தியிருக்கிறார் இயக்குனர். பெரும்பாலான இடங்களில் ‘ட்ராமா’ தான் நல்லது என்று பாத்திரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் காட்டியிருக்கிறார்.
அதனை ரசிப்பவர்களுக்கு ‘இட்லி கடை’ ரொம்பவே பிடிக்கும். அதனை ரசிக்காதவர்களுக்கு இது கேலி கிண்டலுக்கான ஒரு வஸ்து.
படம் பார்ப்பவர்கள் திரையோடு ஒன்றிப்போகிற அளவுக்கு, ஒவ்வொரு பிரேமையும் எப்படி அளவெடுத்தாற்போல வடிக்க வேண்டும்; ஒவ்வொரு காட்சியையும் நூல் கோர்த்தாற் போலத் திரைக்கதையில் அடுக்க வேண்டுமென்பதில் ஒரு இயக்குனராக ஜெயித்திருக்கிறார் தனுஷ்.
பாங்காக்கின் பரபரப்பு, சங்கராபுரம் எனும் கிராமத்தின் நிதானம் இரண்டையும் திரையில் திறம்படக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக்.
பிரேமுக்குத் தேவையான பின்னணியை ‘செட்’ செய்து தருவதில் ‘ஜித்தன்’ஆக விளங்கியிருக்கிறார் கலை இயக்குனர் ஜாக்கி.
இந்தக் கதையில் ராஜ்கிரண், கீதா கைலாசம், வடிவுக்கரசி உள்ளிட்ட சிலரது இருப்பு குறைவாகவே உள்ளது. அவற்றை விலாவாரியாகக் காட்டாமல் தவிர்ப்பதே திரைக்கதையைத் தொய்வானதாக ஆக்காமல் இருக்க உதவும் என்று நினைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா. அது சில இடங்களில் ‘வொர்க் அவுட்’ ஆகவில்லை.
ஆடை வடிவமைப்பு பெரிதாகக் கண்களை உறுத்தாவிட்டாலும், அந்தந்த காட்சிகளின் தன்மையோடு பொருந்தி நிற்கவில்லை.
மற்றபடி ஒப்பனை, சண்டைக்காட்சி வடிவமைப்பு, நடனம், ஒலிப்பதிவு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் ‘எஞ்சாமி தந்தானே’, ‘என்ன சுகம்’, ‘என் பாட்டன் சாமி வரும்’ பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. திரைக்கதையோடும் பொருந்தி நிற்கின்றன.
பின்னணி இசையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு காட்சியிலும் தனது பங்களிப்பை அள்ளித் தந்திருக்கிறார் ஜி.வி.பி. உணர்வுமயமான காட்சிகளில் கண்களின் தளும்பும் நீரைக் கீழே தள்ளிவிடுவதில் அவரது இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெல்டன்!
‘உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருண்டோடும்’ என்று ’கவித்துவமாக’ ரசிகர்கள் உணர்கிற வகையில் பின்னணி இசையில் மாயாஜாலம் செய்திருக்கிறார்.
ஒரு நாயகன் இயக்குனர் ஆகும்போது, தனது பாத்திரத்தை முன்னிறுத்துகிற கதையமைப்பையே தேர்வு செய்வார். ‘இட்லி கடை’யும் அப்படிப்பட்டதுதான். ஆனால், இதில் இதர பாத்திரங்கள் ‘ஸ்கோர்’ செய்ய நிறைய இடமிருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் அசத்தியிருக்கின்றனர்.
அனைத்துக்கும் மேலே, ஒரு எளிமையான உள்ளடக்கம் சிறப்பான திரையனுபவத்தை வழங்குகிறது. கூடவே, எதிர்காலத் தலைமுறையினருக்கு வாழ்வின் மாண்புகளைச் சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.
இந்த படத்தைப் பார்த்துவிட்டு, ‘இட்லிக் கடை வச்சிட்டா அவங்க வாரிசுகளும் அதையே தான் பின்தொடரணுமா’ என்கிற விதமான கேள்விகள் எழக்கூடும். குலக்கல்வி போன்று குலத்தொழில் என்கிற முத்திரையைக் குத்த இது உதவுகிறதா என்ற சந்தேகம் எழலாம்.

அவற்றைத் தீர்க்க, இப்படத்தில் போதுமான விளக்கம் இல்லை. அது ஒரு பலவீனம் தான்.
ஆனால், அப்படியொரு காரண காரியத்தோடு இப்படம் உருவாக்கப்படவில்லை என்பதனை தியேட்டரில் இருந்து வெளியேறுகையில் உணர முடியும்.
அந்த ஒரு விஷயத்தைக் கடந்துவிட்டால், நல்லதொரு ‘பீல்குட் மூவி’ பார்த்த திருப்தியை ’இட்லி கடை’யில் நிறையவே தருகிறார் இயக்குனர் தனுஷ்.