தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஆகஸ்ட் 29-ந் தேதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் (G.Venkataraman) நியமிக்கப்படுகிறார். இதனையடுத்து டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், வெங்கடராமன் இருவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தனர்.
மாநிலத்தின் டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே புதிய டிஜிபிக்கள் தொடர்பான ஒரு பட்டியலை மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பி வைக்கும்; அந்த பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பரிசீலனை செய்யும். அந்த பட்டியலில் இருந்து 3 பேரை மாநில அரசுக்கு, மத்திய அரசு பரிந்துரைக்கும். இதன் பின்னர் புதிய டிஜிபியை மாநில அரசு அறிவிக்கும். இதுதான் டிஜிபி நியமன நடைமுறை.
இந்த நடைமுறையில் தாமதம் இருப்பதாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் புதிய டிஜிபி நியமன அறிவிப்பில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டிஜிபி நியமனத்துக்கு பதில் நிர்வாகப் பிரிவு டிஜிபி, வெங்கடராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட இருக்கிறார். பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட இருப்பதாக நாம் மின்னம்பலத்தில் ஏற்கனவே எழுதி இருந்தோம்.
இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் டிஜிபி வெங்கடராமன் ஆகியோர் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அதேபோல இன்று பணி ஓய்வு பெறும் டிஜிபி சைலேஷ்குமார் யாதவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
பணி ஓய்வு பெறும் டிஜிபிக்கள் சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ்குமார் யாதவ் ஆகியோருக்கு இன்று மாலை 4 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் பணி நிறைவு விழா நடைபெற இருக்கிறது.