தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பதற்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சியிடம் ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜுவால் பணி ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த புதிய நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை.
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்ததை எதிர்த்தும், டிஜிபி நியமனத்தில் பின்பற்றும் நடவடிக்கையை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியும் உச்ச நீதிமன்றத்தில் கிஷோர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (பிப்ரவரி 12) தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில், ‘டிஜிபியை தேர்வு செய்யும் குழுவில் உள்துறை கூடுதல் செயலாளர் இடம்பெற வேண்டும். வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள், தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியானவர்களின் பட்டியலை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த பட்டியலில் உள்ள பெயர்களை பரிசீலனை செய்து யுபிஎஸ்சி இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி பெயரை தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்
