விபத்தில் சிக்கிய எர் இந்தியா AI 171 விமானிக்கு 8,200 மணிநேரமும், துணை விமானிக்கு 1,100 மணிநேர விமானப் பயணம் அனுபவம் உள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. DGCA report on air india pilots experience
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று (ஜுன் 12) மதியம் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நொடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 242 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், 11A இருக்கையில் பயணித்த, பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்துள்ளார்.
எனினும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட இதுவரை 204 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், விமானிகளின் அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), விபத்தில் சிக்கிய விமானத்தின் கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8,200 மணிநேரமும், துணை கேப்டன் கிளைவ் குந்தருக்கு 1,100 மணிநேரமும் விமான பைலட்டாக அனுபவம் கொண்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் விமானம் தொடர்பை இழப்பதற்கு சற்று முன்பு, கேப்டன் சுமீத் சபர்வால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ‘மேடே மேடே’ என எமர்ஜென்சி அழைப்பு விடுத்ததாகவும், எனினும் அடுத்த சில நொடிகளில் விமானம் விபத்தில் சிக்கியதாகவும் சிவில் போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.