சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை 5000ஆக திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு குறைத்துள்ளது.
தென்னிந்தியாவில் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில். கார்த்திகை மாதம் தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மகர விளக்கு மண்டல பூஜை தொடங்கியது.
இந்த பூஜை நாட்களில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்வார்கள்.
இந்நிலையில் நடப்பாண்டில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் கோயில் நிர்வாகம் திணறி போயுள்ளது.
கடந்த காலங்களில் அதிகபட்சமாக 80 ஆயிரம் பேர் வந்த நிலையில் இந்த ஆண்டு மகர பூஜையின் மூன்றாம் நாளான நேற்று ஒரு லட்சம் பேர் வரை வந்துள்ளனர்.
சன்னிதானத்தில் பதினெட்டாம் படிக்கு அருகில் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதைக் கண்டு பக்தர்கள் பொறுமை இழந்து தடுப்பு வேலிகளைத் தாண்டிச் செல்ல முற்பட்டனர்.
கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில், கோழிக்கோட்டைச் சேர்ந்த சத்தி(58) என்ற பெண், பம்பா அருகே உள்ள அப்பாச்சிமேடுவில் மலையேற்றம் மேற்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்தார்.
இந்தசூழலில் தேவசம் போர்டும், கேரள அரசும் சபரிமலை பக்தர்களுக்காக சரியான வசதிகளை செய்துகொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், மோசமான கூட்ட நிர்வாகத்திற்காக தேவஸ்வம் போர்டை கேரள உயர்நீதிமன்றம் கண்டித்தது. இதைத்தொடர்ந்துதான் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 5000ஆக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆன்லைன் மூலம் புக் விட்டு வரும் பக்தர்களில் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்கள் 20,000 பேரும் என நாளொன்றுக்கு 90,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
தற்போது பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20,000 ல் இருந்து 5000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
