ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தனக்கு உயரிய மரியாதை அளிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசுக்கு பிரபல இசையமைப்பாளர் தேவா நன்றி தெரிவித்து இன்று (செப்டம்பர் 26) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். ரஜினியின் நடிப்பில் வெளியான அண்ணாமலை (1992) மற்றும் பாட்ஷா (1995) போன்ற பிரபலமான திரைப்படங்களில் தேவாவின் இசை இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் கடந்த 19ஆம் தேதி தேவாவின் பிரம்மாண்ட இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சார்பில் தேவா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதன்படி ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் சென்ற அவரை, அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோலை வழங்கி ஆஸ்திரிலேய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் கெளரவித்தது.
இதனையடுத்து அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் தேவா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.
எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செப்டம்பர் 24ம் தேதி மாலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு, மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.
எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இந்த பெருமைமிகு தருணத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.