பராசக்தி படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் தேவ் ராம்நாத் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பின்னர் தேதி மாற்றம் செய்யப்பட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கிடையே ஜனவரி 9ஆம் தேதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் அறிவித்திருந்தது.
ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக படம் வெளியாகவில்லை.
தற்போது தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த சூழலில் படம் வெளியாகாத அதிருப்தியில் விஜய் ரசிகர்கள் பராசக்திக்கு எதிராக பல்வேறு கருத்துகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்துக்கு பராசக்தி படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் தேவ் ராம்நாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், “உங்கள் படத்தோடு சேர்ந்து எங்கள் படம் வெளியாகிறது என்பதற்காக, எங்கள் படத்தைப் பாதிக்கச் செய்யும் உரிமை உங்களுக்குக் கிடையாது.
நாங்கள் தான் முதலில் வெளியீட்டுத் தேதியை அறிவித்தோம். உங்கள் படத்தைத் தடுக்க நாங்கள் எப்பொழுதாவது முயற்சி செய்திருக்கிறோமா? ஒருபோதும் இல்லை.
தடைகளைத் தாண்டுவதற்காக சென்னை மற்றும் மும்பையில் உள்ள சென்சார் போர்டு (CBFC) அலுவலகங்களுக்கு ஒவ்வொரு நாளும் நான் நேரில் அழைந்திருக்கிறேன்.
உங்கள் (ஜனநாயகன்) குழுவினர் போராடியது போலவே, நாங்களும் எங்கள் சென்சார் சிக்கல்களை எதிர்கொண்டோம். படம் வெளியாவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் எங்களுக்கு அனுமதி கிடைத்தது.
எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்களைப் பரப்புவது, மக்களைத் தூண்டிவிடுவது, திரையரங்குகளில் அரசியல் கோஷங்களை எழுப்புவது, BookMyShow (BMS) ரேட்டிங்குகளைக் குறைப்பதுஇவை ஆரோக்கியமான போட்டி அல்ல.
கடந்த ஆண்டும் ஒரு பெரிய படத்திற்கு நீங்கள் இதையேதான் செய்தீர்கள்.
சினிமா ரசிகனாகச் சொல்கிறேன், இது நம் யாருக்கும் நல்லதல்ல. பராசக்தி படம் தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டிய ஒரு மாணவர் இயக்கத்தைப் பற்றியது. நம் மாணவர்கள் எப்படிப் போராடினார்களோ, அதேபோல் நாங்களும் இதை எதிர்த்துப் போராடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
