தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (மார்ச் 18) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் மெட்ரோ நிலையம் அருகே ஸ்ரீ ராம் சௌக் பகுதியில் உள்ள கட்டிடத்தில் காலை சுமார் 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் 30 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளான மணிப்பால் மற்றும் ஐஜிஐ ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீயின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற இரண்டு பேர் கட்டிடத்திலிருந்து கீழே குதித்ததால் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா எக்ஸ் தளத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து மேஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி துணை நிலை ஆளுநர் தரஞ்சித் சிங் சாந்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருவதாகவும், நிலைமையைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
