நடிகர் டெல்லி கணேஷின் மரணம் பல இளைஞர்களிடத்தில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல வெப் சீரிஸ் இயக்குநர் வெற்றி என்பவர் தன் பேஸ்புக் பக்கத்தில் டெல்லி கணேஷ் பற்றி வெளியிட்ட பதிவு இளைஞர்கள் வளர்வதில் டெல்லி கணேஷ் காட்டிய அக்கறையையும் அவரின் உதவும் உள்ளத்தையும் காட்டுகிறது. அந்த பதிவில் சொல்லப்பட்ட விஷயம் இதுதான்.
டெல்லி கணேஷ் ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டின் மேல் போர்ஷனை சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டிருந்தார். எங்களுடைய பெரும்பாலான வெப் சீரிஸ்கள் அந்த வீட்டில் தான் எடுக்கப்பட்டன. முதல் முதலில் போன போது அவரது மகன் மகா பேசினார். எவ்வளவு வாடகை என்று கேட்ட போது உங்களால் எவ்வளவு முடியுமென்று கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. குறும்படங்களும் youtube சீரிஸ்களும் எடுக்க மட்டுமே அனுமதிக்கப்படும். அந்த வீட்டுக்கு நாம் சொல்வது தான் வாடகை. கரண்ட் பில் கூட தனியாக வாங்க மாட்டார் மகா.
இது அப்பாவின் விருப்பம் என்பார் மகா. என்னுடைய நண்பர், வினோத் அவரது வீட்டில் ஒரு வெப்சீரிஸ் எடுக்கும் போது டெல்லி கணேஷையும் நடிக்க வைத்தார். அவர் நடிப்பதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் அவரை வைத்து இயக்க வேண்டும் என்று பெரு விருப்பம் இருந்தது. ஆனால் காலம் கை கூடவில்லை. படப்பிடிப்புக்குச் செல்லும் நாட்களில் பெரும்பாலும் அவர் தான் சாவி எடுத்து வருவார். யார் டைரக்டர் என்று கேட்டுக் கொண்டே சாவியை தருவார். ஒரு நாள் கூட படப்பிடிப்பில் பிரச்னை வந்ததில்லை. பணம் இல்லாத நேரங்களில் கடன் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். மகா நல்ல மனிதர். டெல்லி கணேஷ் அவரை நன்றாக வளர்த்திருக்கிறார். போய் வாருங்கள் ஐயா.
இவ்வாறு அந்த பதிவில் உருக்கமாக கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவி ஏற்றார்!
வாரத்தின் முதல் நாளே வீழ்ந்த தங்கம் விலை… நகைபிரியர்கள் குஷி!