டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உமர் நபிக்கு உதவியாக இருந்த கூட்டாளி அமீர் ரஷீத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
டெல்லியில் நவம்பர் 10-ந் தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் 10 பேர் பலியாகினர்; 32 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், டெல்லி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அமீர் ரஷீதின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உமர் நபியுடன் அமீர் சேர்ந்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கார் வாங்குவதற்காக அமீர் டெல்லிக்கு வந்தார்; அந்த காரையே வெடிகுண்டு பொருத்தப்பட்ட வாகனமாக மாற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு வெடித்த காரை ஓட்டிய உமர் நபி, ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர்; ஹரியானாவின் Al Falah பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்.உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
டெல்லி தாக்குதல் தொடர்பாக 73 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உ.பி போலீஸ் மற்றும் பிற மத்திய அமைப்புகளுடன் இணைந்து, இந்த தாக்குதலின் பின்னால் உள்ள பெரிய சதித்திட்டத்தை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
