டெல்லி கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு கிடைக்கப் போகும் தண்டனை அதிஉச்சமாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.
குஜராத்தில் மோதிபாய் ஆர் சவுத்ரி சாகர் ராணுவப் பள்ளி மற்றும் சாகர் இயற்கை ஆலையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமித் ஷா, டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
இந்த பயங்கரவாத செயலில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாடு நிச்சயம் நிறைவேறும் என்று தெரிவித்தார். டெல்லியில் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை நமது நாட்டின் மீது இது போன்ற தாக்குதலை நடத்துவது குறித்த சிந்தனை ஏற்படாத வகையில், உலகிற்கான செய்தியாக இருக்கும் என்று கூறினார்.
