டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்ட 3 டாக்டர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மருத்துவ மாணவி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10-ந் தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. உமர் நபி என்பவர் தற்கொலைப்படையாக செயல்பட்டு இந்த தாக்குதலை நடத்தினார். இத்தாக்குதலில் 10 பேர் பலியாகினர்; 32 பேர் படுகாயமடைந்தனர்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி – NIA விசாரணை நடத்தி வருகிறது. தற்கொலைதாரி உமர் நபியின் கூட்டாளி ஒருவரை ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர்கள் ரெஹான், முகம்மது, முஸ்தாகீம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிசார் ஆகியோர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர்.
தற்போது இந்த 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியானதால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேரையும் விடுதலை செய்துள்ளனர்.
அதேநேரத்தில் மருத்துவ மாணவியான பிரியங்கா சர்மா என்பவரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
