டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 4ம் தேதி SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. SIR க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை கைவிட சென்னை தங்க சாலையில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில் நேற்று மாலை புது தில்லியில் ஒரு கார் வெடி விபத்து ஏற்பட்டு அதில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகி உள்ளனர்.பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து எப்போதெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் இத்தகைய வெடிகுண்டு கலாச்சாரம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் பிகாரில் இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக நேற்று மாலை இந்த கொடூரமான ஒரு வெடி விபத்து ஏற்பட்டு 13 பேர் பலியாகி உள்ளதோடு ஏராளமான பொதுமக்களும் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றனர்.
டெல்லி தலைநகரம் என்பது உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கக் கூடிய ஒரு நகரம். அந்த நகரத்திலேயே பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இத்தகைய ஒரு வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் மாநில அரசாங்கம் என்று ஒன்று இருந்தாலும் பாதுகாப்பு என்பது உள்துறை அமைச்சரகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
