ஹரியானாவின் அல்ஃபலா பல்கலைக் கழகக் குழுமங்களின் தலைவர் ஜாவேத் அகமது சித்திக் சட்டவிரோத நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்; 32 பேர் படுகாயமடைந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சதித் திட்டத்தில் ஈடுபட்டோருக்கு அல்ஃபலா பல்கலைக் கழகத்துடன் தொடர்பிருக்கிறது என்பது விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டு.
டெல்லியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் உன் நபி, அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அல்ஃபலா பல்கலைக் கழகம் மீதான நிதி மோசடி புகார்கள் தொடர்பாக டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர். இதனடிப்படையில் அல்ஃபலா பல்கலைக் கழக குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரூ.48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்(PMLA) அல்ஃபலா பல்கலைக் கழக குழுமங்களின் தலைவர் ஜாவேத் அகமது சித்திக், அமலாக்கத்துறையால் இன்று நவம்பர் 18-ந் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான அங்கீகாரச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தியது, வெளிநாட்டு நிதியை சட்டவிரோதமாகப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ் சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.
