திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் மக்களவை இன்று காலை கூடியதும் திமுக கூட்டணி கட்சி எம்.பிக்கள், திருப்பரங்குன்றம் பிரச்சனை குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்துக்குப் பின்னர் விவாதிக்கலாம் என்றார்.
இதனை ஏற்க மறுத்த தமிழக எம்.பிக்கள், ‘வேண்டும் வேண்டும்! நீதி வேண்டும்! காப்பாற்று! காப்பாற்று! திருப்பரங்குன்றம் மலையைக் காப்பாற்று!’ என தமிழில் முழக்கமிட்டனர். இதேபோல தமிழக எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்ளை எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தமிழக எம்.பிக்களின் அமளிக்கு இடையே சபை நடவடிக்கைகளை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்தினார்.
அப்போதும் சபையின் மையப் பகுதிக்கு சென்று சபாநாயகர் இருக்கை முன்பாக உரத்த குரலில் தமிழக எம்.பிக்கள் இடைவிடாமல் முழக்கம் எழுப்பினர். இதனால் 30 நிமிடங்களுக்கு மேல் சபையை சபாநாயகர் ஓம்பிர்லாவால் நடத்த முடியவில்லை. இதனையடுத்து மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் வெளிநடப்பு
மாநிலங்களவையிலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை விவாதிக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் விவாதம் நடத்த சபை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டார். இதனையடுத்து மாநிலங்களவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக எம்.பிக்களுடன் பிற மாநில எதிர்க்கட்சி எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.
