பெண்களைக் கண்ணைப் பார்த்துப் பேசத் தயங்குகிற. அதனால் எதிர்கொள்ள முடியாத மதன் என்ற இளைஞனை சரவண விக்ரம் அவனது நண்பன் ஒருவன் பாலியல் விடுதிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே மதனுக்கு கிடைக்கும் பெண் ரதி, மிக அழகாக இருக்கிறாள்.
நிறைய பேசணும் என்கிறான் மதன். அவள் காதும் கொடுக்கிறாள்.பெண்களைப் பற்றிய தனது எண்ணங்கள், நினைப்பதை அவர்களிடம் பேச முடியாமல் தயங்குவது, அவர்களை ஒழுங்காக டீல் செய்ய முடியாத காரணத்தால் அந்தக் காதல்கள் பிரேக்கப் ஆனது, சிறுவயதில் தனக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்த ஒரு ‘அக்கா’விடம் ஐ லவ் யூ என்று சொல்லக் கூட முடியாத ஏக்கம் … என்று தனது பிரச்னைகளை மதன் சொல்கிறான்.
ஒரு நாள் தன்னுடன் டேட்டிங் வந்தால் ரதியிடம் பழகி அதன் மூலம் மற்ற பெண்களை எதிர்கொள்ளும் பழக்கம் வரும் என்கிறான். அவளும் மறுநாள் போகலாம் என்று சொல்ல, அன்று இரவு ரதி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருடன் இருக்க வேண்டியிருக்கிறது . அங்கிருந்து ரதி கிளம்பிப் போன பிறகுதான், துப்பாக்கி காணாமல் போனதை உணர்கிறார் போலீஸ் அதிகாரி.
மறுநாள் மதனோடு ரதி, விடுதி மேனேஜருக்கு (பசுபதி ராஜ்) தெரியாமல் வெளியே போய் விட, ஓரளவு யூகித்து அவளை பார்க்க போலீஸ் அதிகாரி வருகிறார்.
இதற்கிடையில் ஒரு அப்நார்மல் ரவுடியும் அவன் ஆட்களும் விடுதிக்கு வந்து ரதி தான் வேண்டும் என்று துப்பாக்கியால் சுட்டுக் கேட்கிறார்கள்.
போலீசும் ரவுடி குரூப்பும் மேனேஜரை அழைத்துக் கொண்டு, மதனையும் ரதியையும் தேடி அலைகிறார்கள்.
மதனை விடுதிக்கு அழைத்து வந்த அவனது நண்பனைப் பிடித்து, அவன் மூலம் மதனையும் ரதியையும் தூக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அந்த நண்பன் பலமுறை போன் செய்தும் மதன் போனை எடுக்கவில்லை (காரணம் எல்லாம் ஒன்றும் இல்லை. அது டைரக்டர் விருப்பமாக இருக்கும் போல)
காரணமே இல்லாமல் மதனை பிரேக்கப் செய்து விட்டு இன்னொரு பையனோடு போன முன்னாள் காதலியை மதன், ரதி இருவரும் சந்திக்கிறார்கள். அந்தக் காதலி புதிய காதலனோடு வருகிறாள். மதன் மனம் சுருங்க, அந்த காதலி மதனை சகஜமாக டீல் செய்கிறாள். ஆனால் அந்த புதிய காதலன் ரதியின் கஸ்டமர். எனவே ரதி அவர்களுக்குள் சண்டை மூட்டி விடுகிறாள்.
விட்டு விட்டுப் போன அந்தக் காதலியிடம் மதன் கேட்க விரும்பி, ஆனால் கேட்க முடியாமல் போய், ரொம்ப நாளாக மனம் வெதும்பிக் கொண்டு இருந்த ஒரு கேள்வியை, அவளிடம் மதன் கேட்கிறான். அந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறாள் ரதி.

மழை பெய்யும் போது பேண்ட் அவிழ்க்காமல் சிறுநீர் போவது, நிர்வாணமாக பைக் ஓட்டுவது போன்ற – மதனின் ‘அதிமுக்கிய’ ஆசைகளை நிறைவேற்ற ரதி உதவி செய்கிறாள்.
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் மதனும் ரதியும் சேர்ந்தால் என்ன செய்வார்களோ, அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இருவரும் செய்கிறார்கள்.
ரதியைப் பிடிக்க கொலைகள் செய்யவும் ரவுடி தயாராக, ,போலீஸ் அதிகாரியோ எனக்கு என் துப்பாக்கி முக்கியம். ஆனால் கொலைகள் கூடாது என்கிறார்.
இந்த கதாபாத்திரங்களும் இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களும் சேர்ந்து எதை நோக்கிப் போகின்றன என்பதே,
இன்ஸாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் மற்றும் லாக் லைன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்க, மலையாள நடிகை ஹஸ்லி அமான் கதாநாயகியாக நடிக்க, ராஜேஷ் பாலச்சந்திரன், பசுபதி ராஜ், சாய் தினேஷ் , யுவராஜ் கிருஷ்ணன் நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரவீன் கே. மணி இயக்கத்தில் வந்திருக்கும் படம். டியர் ரதி.
படத்தில் வசனங்கள் பல இடங்களில் ஆழமாக அர்த்தபுஷ்டியுடனும் எள்ளல் நடையிலும் இருந்தது, சிறப்பு.
மதனின் பழைய காதல் சம்பவங்கள் பிளாஷ்பேக்கில் காட்டப்படும் போது, அங்கே மதனும் ரதியும் நின்று பார்ப்பது போலவே காட்டும் உத்தி பழசுதான்.
ஆனால் இடையிடையே நிகழ்வில் இருக்கும் மதனும் ரதியும் அந்த பிளாஷ்பேக்கில் உள்ளே புகுந்து இடையே இடையே கலாய்ப்பது (தமிழுக்கு) ரொம்ப புதுசு அங்கே பெயர் வாங்குகிறார் இயக்குனர். பிளாக் காமெடி, அப்நார்மல், RUGGED படத்துக்கான டோன் கலை இயக்கம், ஷாட் ஸ்டைல் , படமாக்கல் பாராட்டும்படி செட் ஆகி இருக்கிறது . வித்தியாசமான முகங்களை இயக்குனர் தேடிப் பிடித்து பயன்படுத்தி இருக்கிறார்.
நாயகி ஹஸ்லி அமான் நிறுத்தி நிதானமாக உற்றுணர்ந்து நடிக்கிறார் . பாராட்டுக்கள்.
இதுவரை நடித்த படங்களின் இயல்பில் இருந்து வேறு மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் பசுபதி ராஜ்.
இப்படி பாராட்ட பல விஷயங்கள் உள்ளன. மறுப்பதற்கு இல்லை.
ஆனால் ஒட்டுமொத்தமாக உருட்டி, என்ன கொடுக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லையா?
கதை , திரைக்கதை, வசனம் , இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு , படத் தொகுப்பு, விஷுவல் எபெக்ட் … இவை வித்தியாசமாக இருக்க வேண்டும்தான். ஆனால் அது ஏற்றுக் கொள்ளும்படியாகவும் வெகுஜன ரசிகனுக்கு புரியும்படியும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும். அதுதானே ரொம்ப முக்கியம்?
ஆனால் வித்தியாசமாக இருந்தால் போதும்; மற்றது எல்லாம் ஹெச் ராஜாவின் ஹைகோர்ட்டே போச்சு என்று படத்தை எடுத்துத் தள்ளி இருக்கிறார்கள்.
இந்த இடத்தில் இந்த நீளத்தில் இப்படி ஒரு காட்சி வைத்தால் தாங்குமா? இல்லை தொங்குமா? என்பது பற்றி புரிதல் இல்லாமல் படம் பயணிக்கிறது.
படமாக்கலில் கொடுக்கப்படும் பில்டப், காட்சியிலும் இருக்க வேண்டும் இல்லையா? அது இல்லை. அதனால் ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை விமர்சன எல்லைக்குள் வரவில்லை. அதை மீறி பாராட்டும் அளவுக்கு சிறப்பாகவும் இல்லை.
எந்த அவசியமும் இல்லாத உத்திகள் மூலம் உணர்வுக்கு கூட்டலை சிதறடிக்கிறார் படத் தொகுப்பாளர் பிரேம்.
படத்தின் பிரேம்களில் இயக்குனர் கவனம் செலுத்தியதன் விளைவாக(?) லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு கவனிக்கும்படி இருக்கிறது.
நகைச்சுவையாகவும் இல்லாத சில காட்சிகளை எல்லாம் திருப்பம் என்று வைப்பதும் அதனால் பெரிய மாற்றங்கள் நிகழ்வது போல சம்மந்தமில்லாமல் காட்சிகள் வருவதும் எரிச்சல்.
(உதாரணம் முத்தம் கொடுக்கப் போன காதலன் காதலியின் கன்னத்தில் வாய் வைத்து ப்ப்பூ.. என்று ஊதியதற்காக பிரேக்கப்! தும்மியதற்காக பிரேக்கப் . அதாவது, இப்போது எது எதற்கெல்லாமோ பிரேக்கப் நடக்கிறது என்று சொல்ல இப்படி காட்சிகள் வைத்தோம் என்பது படக்குழுவின் பாயிண்ட்டாக இருக்கலாம். ஆனால் அதற்கான ஒர்த் அந்தக் காட்சிகளில் இல்லை. அப்படியே இருந்தாலும் இப்படி எல்லாம் பிரேக்கப் செய்யும் பெண்களை எண்ணி ஒருவன் மனம் வருந்த வேண்டிய அவசியம் என்ன?)
அதிகம் பேசப்படாத சுவாரஸ்யமான விஷயங்களை, சற்று மறைத்துப் போக்கு காட்டி, அப்புறம் புரியும்படி சொல்வதுதான் ஒரு படைப்பாளியின் வேலை. அதுதான் ரசிகர்களை ஈர்க்கும்.
ஆனால் அதற்கு மாறாக, ‘தக்காளி .. இந்தக் காட்சி உனக்கு எல்லாம் புரிஞ்சிருச்சின்னா அப்புறம் நான் என்ன டைரக்டர்?’ என்ற முடிவோடு காட்சிகள் வைத்தால் என்ன பலன்? நமது எதிரிகள் நாம் செய்வது புரியாமல் குழம்புவது பெருமையாக இருக்கலாம் . நம் படத்தைப் பார்க்க வரும் ரசிகன் நமக்கு எதிரியா என்ன?
தேவையும் இயல்பும் இல்லாமல் எந்த சுவாரஸ்யமும் கூட இல்லாமல் ஹோமோ செக்ஸ் கேரக்டர்கள், லெஸ்பியன் விஷயங்கள் திணிக்கப்பட்டு வருவதும் எரிச்சல்.
அப்புறம்.. ”என்னதான் கஷ்டம் வந்தாலும் இப்படி விபச்சாரம் செய்வதற்கு பதில், உழைச்சு கண்ணியத்தோடு வேலை செஞ்சு வாழக் கூடாதா?” என்ற கேள்வி எந்தக் காலத்திலும் தவறாக ஆகாது.
ஒழுக்கம், கற்பு இவைகளுக்கு மட்டுமல்ல… பெண்களின் சுயமரியாதை பற்றியும் கவலைப்படும் கேள்விதான் அது. அப்படிக் கேட்பவரைப் பார்த்து, ” நாங்க என்ன விரும்பியா வந்தோம். வாயை மூடு ” என்ற ரீதியில் எதிர்வினை ஆற்றும் செயலை நியாயப்படுத்தும் காட்சிகள்.. அயோக்கியத்தனம்.
மொத்தத்தில் டியர் ரதி… மக்கு பிளாஸ்திரி
— ராஜ திருமகன்
