நல்லகண்ணுவை மரணம் ஒன்றும் செய்துவிட முடியாது. அவர் உடல் ரீதியாக எங்களோடு இல்லையெனினும், எங்களுடைய வாழ்க்கையிலும் போராட்டங்களிலும் அவர் உணர்வுபூர்வமாக என்றென்றைக்கும் உயிர்ப்போடு இருப்பார் என டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“ஆர்.என்.கே என்று கட்சித் தோழர்களாலும், கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டு போற்றப்பட்ட தோழர் ஆர். நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். கம்யூனிஸ்ட் குடும்பத்தின் மூத்த உறுப்பினர். கட்சி தொடங்கப்பட்ட நாளிலேயே அதனுடன் இணைந்து வளர்ந்து, நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அயராது பாடுபட்டவர். தன்னுடைய சுயநலங்களையும், சுகதுக்கங்களையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் அயராது உழைத்தவர். மிகப்பெரிய போராளியும் புரட்சியாளரும் ஆவார் தோழர் நல்லகண்ணு.
சில காலமாக உடல்நலம் குறைந்து சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் பெரும் முயற்சிகளும் பலனளிக்காமல் இன்று அவர் நம்மை எல்லோரையும் விட்டு பிரிந்துவிட்டார். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு. அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்கள், தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திற்கும் இது ஒரு பெரும் இழப்பாகும்.
இன்றைய அரசியல்வாதிகள், மக்களுக்காகச் செயல்படும் சமூகப் போராளிகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கான ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு. கட்சிப் பாகுபாடு இன்றி இன்று அவர் போற்றப்படுகிறார் என்றால், அக வாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் அவர் கடைப்பிடித்த ஒழுக்கங்களும் விழுமியங்களும்தான் காரணம். நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் எப்படி போராட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரை இழந்துள்ளோம் என்பதால் எங்களுக்கு இது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அறியப்பட்டவர். ஒரு நல்ல கம்யூனிஸ்ட், போராளி, புரட்சியாளர், மூத்த தலைவர் என்ற முறையில் அவர் போற்றப்பட்டார்.
இன்று அவர் எங்களை விட்டு பிரிந்துவிட்டார். இது பெரும் துயரம். ஆனால் அவரது வாழ்க்கை ஒரு உத்வேகம் அளிக்கக்கூடிய வாழ்க்கை. அவர் உயர்த்திப் பிடித்த வாழ்க்கை விழுமியங்களைப் பார்க்கும்போது, மரணம் அவரை ஒன்றும் செய்துவிட முடியாது. உடல் ரீதியாக எங்களோடு இல்லையெனினும், எங்களுடைய வாழ்க்கையிலும் போராட்டங்களிலும் அவர் என்றென்றைக்கும் உயிர்ப்போடு இருப்பார்.
அவரது வாழ்க்கை வருங்கால தலைமுறைகளுக்கு போராட்ட உணர்வை உருவாக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும். அவர் விட்டுச் சென்ற பணிகளையும் உயர்ந்த மதிப்புகளையும் காப்பாற்றி முன்னெடுத்து செல்வோம் என்ற உறுதிப்பாட்டை இந்த நேரத்தில் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் கட்சியின் சார்பில் தோழர் நல்லகண்ணுவுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.” என தெரிவித்தார்.
