சிலிண்டர் தட்டுப்பாடு : அல்வா விற்பனை நிறுத்தம்!

Published On:

| By Kavi

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இருட்டுக்கடை அல்வா விலை உயர்த்தப்பட்டுள்ளது. சாந்தி அல்வா கடையில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. 

ஈரான் – இஸ்ரேல் -அமெரிக்கா போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறு மற்றும் நடத்தர ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

இந்தசூழலில் தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒரு கிலோ அல்வா 400 ரூபாயிலிருந்து 440 ரூபாயாகவும், அரை கிலோ அல்வா 200 ரூபாயிலிருந்து 220 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இருட்டுக்கடை அல்வாவை போல நெல்லையில் அதிகம் விற்பனையாகும் சாந்தி கடை அல்வா விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சாந்தி கடை உரிமையாளர் சுப்பிரமணி இன்று (மார்ச் 24) செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “தற்போது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று வரை எங்களுக்குத் தேவையான சிலிண்டர்கள் ஓரளவிற்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தன.

ADVERTISEMENT

இருப்பினும், கடந்த மூன்று தினங்களாக சிலிண்டர் இருப்பு இல்லை என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துவிட்டனர். எங்களிடம் இருந்த குறைந்தபட்ச இருப்பை வைத்து இதுவரை உற்பத்தியைத் தொடர்ந்து வந்தோம். ஆனால், இன்று காலை 11 மணி வரையிலான உற்பத்திக்கு மட்டுமே எங்களிடம் எரிவாயு இருப்பு இருந்தது. அதன் பிறகு, எங்களது அல்வா உற்பத்திப் பணிகள் முழுமையாக நிறுத்தப்படும்.

அடுத்தகட்டமாக மாற்றுத் திட்டங்கள் குறித்து இனிமேல்தான் ஆலோசிக்க வேண்டும். எரிவாயு விநியோகம் எப்போது சீராகும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை. வணிகப் பயன்பாட்டிற்கு 50 சதவீத சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. இது தொடர்பாக டீலர்களிடமிருந்து இதுவரை எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை. விரைவில் இந்தச் சிக்கல் தீர்ந்து, நல்ல செய்தி வரும் என்று நம்புகிறோம்.” என்று கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share