அரபிக் கடலில் புதிய புயல் சின்னம் நிலவுவதால் கேரளாவை ஒட்டிய தமிழக பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 19-ந் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு கொங்கன்- வட கேரளா பகுதிகளுக்கு அப்பால்-மத்திய கிழக்கு- தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது; இது கரையைக் கடக்கும் போது கேரளா எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மீதான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி- காரைக்காலிலும் இன்று ஆகஸ்ட் 19-ந் தேதி முதல் ஆகஸ்ட் 24-ந் தேதி வரை 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிஷா- வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் இன்று கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.