மோன்தா புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தீவிரப் புயல் “மோன்தா” கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது.
இந்நிலையில் புயல் கரையை கடக்கத் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மோன்தா புயல் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசூலிப்பட்டினத்திலிருந்து 120 கி.மீ கிழக்கிலும்,காக்கிநாடாவிலிருந்து 130 கி.மீ தெற்கிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 230 கி.மீ தெற்கு-தென்மேற்கிலும் உள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 3-4 மணி நேரத்தில் மசூலிப்பட்டினத்திற்கும் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே காக்கிநாடாவை ஒட்டி ஆந்திரப் பிரதேச கடற்கரையை தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும். அப்போது அதிகபட்சமாகத் தொடர்ச்சியான காற்றின் வேகம் 90-100 கி.மீ ஆகவும், இடைஇடையே 110 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்’ என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
