வங்கக்கடலில் உருவான ‘மோன்தா’ புயல் காக்கிநாடாவுக்கு அருகில் நள்ளிரவில் கரையை கடந்தது.
தமிழகம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து புயலாக உருவானது. இதற்கு தாய்லாந்து பரிந்துரைத்த ‘மோன்தா’ எனப் பெயரிடப்பட்டது. இந்தப் புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்றது.
செவ்வாயன்று காக்கிநாடாவுக்கு அருகில் மாலை 7.30 மணியளவில் தொடங்கி அடுத்த 3–4 மணி நேரம் வரை புயல் கரையை கடப்பது நீடித்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 90 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மோகனசீமா பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுவனும் படுகாயம் அடைந்தனர்.
இன்றும் கனமழை முன்னறிவிப்பு
ஆந்திராவில் புயல் காரணமாக 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 76,000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அண்டை மாநிலமான ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து வீடுகளும் சேதமடைந்துள்ளன.
