பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதே அதிமுகவினரின் வாடிக்கை என்று கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டி அதிமுக பாஜக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் உங்க கனவை சொல்லுங்க என்ற தமிழக அரசின் திட்டத்தை விமர்சித்து பேசினார்.
அப்போது எனக்கு நயன்தாரா வேணும்.. கனவ நிறைவேத்துவாரா? நயன்தாராவை திருமணம் செய்து வைக்க சொன்னால் கனவை நிறைவேற்றுவாரா என அருவருக்கத்தக்க வகையில் பேசினார். சிவி சண்முகத்தின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பதிவில், “
அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பதிவில், “அதிமுகவின் சி. வி. சண்முகம் நயன்தாரா குறித்துப் பொதுவெளியில் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்திற்குரியது.
ஒரு பெண்ணை பொதுவெளியில் இப்படி அப்பட்டமாக, ஆபாசமாகப் பேசுவதை நாம் இயல்பாகக் கடந்து போய்விட முடியாது. திரைத்துறையில் ஒரு வெற்றிகரமான பெண், இன்னொருவரின் மனைவி, இரண்டு குழந்தைகளின் தாய் பல்வேறு போராட்டங்களைக் கடந்து,தொடர்ந்து பயணிக்கும் ஒரு பெண்ணை மிகவும் மோசமான பார்வையோடு அணுகுவது,பேசுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. சட்டப்படியும் தவறு.
அரசியல் மேடைகளில் பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ஆபாசமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. பல்வேறு தடைகளை,போராட்டங்களைக் கடந்து தான் சார்ந்த துறைகளில் வெற்றிகரமாகப் பயணிக்கும் பெண்களை மீண்டும் மீண்டும் உடலாக மட்டுமே பார்க்கும், அவமதிக்கும் மனநிலையை நாம் ஒரு சமூகமாக கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
அப்பொழுதுதான் பெண்கள் பொதுவெளியில் பாதுகாப்பாகவும்,கண்ணியமாகவும் உணர முடியும். சி. வி சண்முகம் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.
