திருப்புவனம் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு இன்று ஜூலை 6-ந் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. Custodial DeathAjith Kumar Naveenkumar
சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், திருப்புவனம் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது அஜித்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவில் காவலாளி அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தவெக தலைவர் நடிகர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அஜித்குமார் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த பின்னணியில், மதுரை அரசு மருத்துவமனையில் அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு இன்று ஜூலை 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது. அஜித்குமாரை போலீசார் விசாரித்த போது தம்மையும் அடித்து துன்புறுத்தியதாக நவீன்குமார் கூறியிருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது கவனம் பெற்றது.
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, அஜித்குமார் குடும்பத்தினரை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பின் போது பல மணிநேரம் தொடர்ந்து அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் நின்று கொண்டே இருந்தார். இதனால் அவரது கால் வீங்கிவிட்டது. இதனையடுத்தே மதுரை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என அந்த குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.