கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் பகுதியில் நஷீர் என்கின்ற ஷாமு பல காலமாக தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்து வருகிறார்.
இதற்காக நகர காவல்நிலையம், ஸ்பெசல் டீம் மற்றும் எஸ்.பி அலுவலகம் வரையில் மாமூல் கொடுத்து தனது லாட்டரி பிசினஸை தடையில்லாமல் விரிவுபடுத்தி வந்துள்ளார்.
சிதம்பரம் பகுதியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றாலோ, விஐபி பந்தபஸ்து என்றாலோ போலீசாருக்கும், கைது செய்யப்படுவர்களுக்கும் சாப்பாடு வாங்கி கொடுப்பது நசீருடைய பணம் தான் என்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு ஆடியோ வருகிறது. அதில், சிதம்பரம் பகுதியில் தடையில்லாமல் மாமூல் கொடுத்து லாட்டரி சீட்டு விற்பனை கொடிக்கட்டி பறப்பதாக கூறப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக உயர் அதிகாரிகள் விசாரித்து விளக்கம் கேட்டு, கடலூர் எஸ்பிக்கு ஒரு மெமோ அனுப்பப்பட்டது. அந்த மெமோவின் அடிப்படையில் சிதம்பரம் டிஎஸ்பியிடமும், நகர காவல் ஆய்வாளரிடமும் விளக்கம் கேட்டுள்ளார் எஸ்.பி. ஜெயக்குமார்.
அதற்கு அந்த அதிகாரிகள், ’என்னது லாட்டரி சீட்டா, அதெல்லாம் இங்கே இல்லை’ என்றும், ’மாமூல் யாரும் வாங்கவே இல்லை’ என ஒரேடியாக மறுத்துவிட்டனர்.
அதனை அப்படியே உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார் எஸ்பி ஜெயக்குமார். இது உண்மை தானா என விசாரித்து நடவடிக்கை எடுக்க உயரதிகாரி பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையில் ஸ்பெசல் டீம் அமைக்கப்பட்டது.
அதன்படி ஸ்பெசல் டீம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 2) நசீர் என்ற ஷாமுவின் தம்பியை தூக்கியுள்ளனர். அவரிடம், லாட்டரி சீட்டு விற்பனை, மாமூல் கொடுப்பது குறித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் படி நேற்று மதியம் ஷாமுவை பிடித்துள்ளனர். அவரிடம் தனி இடத்தில் வைத்து விசாரணையை நடத்தினர். அவரது செல்போனை பறிமுதல் செய்து அதில், இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவருடன் பேசிய போலீசார் செல்போன் எண்களின் விவரங்களை எடுத்தனர்.
அதன்மூலம் யார் யாருக்கு எப்போது, எவ்வளவு, எப்படி மாமூல் வழங்கப்பட்டது குறித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் கொடுத்த 25 சதவீத வாக்குமூலத்தின் படி, நகர காவல்நிலைய எஸ்.பி தனிப்பிரிவு ஏட்டு கார்த்தி, போலீஸ் நடராஜ், கோவிந்தராஜ், எஸ்.ஐ. பரணி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, டிஎஸ்பி லாமேக் என தான் மாமூல் கொடுத்த அதிகாரிகளின் பட்டியலை கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு மொத்தமாக மாதத்திற்கு மாமூல் மட்டுமே 10 லட்சம் வரை கொடுத்தது வந்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலை ஸ்பெசல் டீம் டிஎஸ்பி ராஜா மேலிடத்துக்கு அனுப்பினார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர் வரை இரவோடு இரவாக வேலூர் எஸ்பியிடம் ரிப்போர்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. பொதுவாக டிஎஸ்பி மீது உள்துறையில் இருந்து தான் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அவர் இந்த நேரம் பார்த்து மெடிக்கல் லீவில் சென்றுவிட்டார்.
மேலும் குற்றம்சாட்ட போலீசாரை பெயர்களை எஃப்.ஐ.ஆரில் சேர்க்க ஆலோசிக்கப்பட்டு, பின்னர் இடமாற்றம் செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நசீரை நேற்று இரவு ரிமாண்ட் கொண்டு சென்றனர். அதுவரை கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய போலீசார் மற்றும் அதிகாரிகளூம், அதேபோல சிதம்பரத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட போலீசாரும் தங்களது பெயரை நசீர் எக்காரணம் கொண்டும் சொல்லிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டார்களாம். விசாரணை முடிந்து அவர் ரிமாண்ட் செய்யப்பட்ட பின்னர் தான் அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கையால் வடக்கு மண்டலமான கடலூர். விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 10 மாவட்ட போலீசாரும் எந்த நேரத்தில் எது நடக்கும் என்று தெரியாமல் தற்போது சமூக விரோத நபர்களிடம் கை நீட்ட அஞ்சி வருகின்றனராம்.