இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி உயர்வு: காரணம் என்ன தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

crude oil imports from india increased in 2025 november month

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி நவம்பர் மாதத்தில் 0.2% உயர்ந்து 21.06 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்திற்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோர் என்பதால், இந்தத் தரவு அதன் எண்ணெய் தேவையின் முக்கிய குறிகாட்டியாகும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கச்சா எண்ணெய் இறக்குமதி 11.1% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 18.95 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 21.06 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

ADVERTISEMENT

அதே சமயம், கச்சா எண்ணெய் பொருட்களின் இறக்குமதி நவம்பர் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் சுமார் 8.6% குறைந்து 4.25 மில்லியன் டன்களாக உள்ளது. மேலும், எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதி 1.7% குறைந்து 5.25 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது.

இந்தச் சூழலில், ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் (Rosneft) நிறுவனத்திடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் சரக்குகளைப் பெற்று வருகிறது. அமெரிக்கா ரஷ்ய தயாரிப்பாளர்கள் மீது விதித்திருந்த தடைகளுக்குப் பிறகு ஒரு மாத கால சலுகையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி டிசம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்களைத் தாண்டும் என வர்த்தக மற்றும் சுத்திகரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

தள்ளுபடியில் எண்ணெய் வழங்கும் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து சுத்திகரிப்பு ஆலைகள் மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளதால் இறக்குமதி குறையும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்யாகியுள்ளன. மேலும், இந்தியாவின் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனது தென்னிந்தியாவில் உள்ள மணலி சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை ஒரு நாளைக்கு 210,000 பீப்பாய்களில் இருந்து 280,000 பீப்பாய்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எரிபொருள் சில்லறை விற்பனையிலும் ஈடுபட உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share