மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூட்டிய அமைச்சரவை கூட்டத்தை சிவசேனா அமைச்சர்கள் புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை உருவாக்கி கூட்டணி வைத்து கொண்டது பாஜக. இதேபோல் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸையும் உடைத்தது பாஜக. அக்கட்சியின் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுடனும் பாஜக கூட்டணி வைத்தது.
மகாராஷ்டிராவில் தற்போது பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வர்களாகவும் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஷிண்டே சிவசேனா கட்சி நிர்வாகிகள் பலரையும் பாஜக, தமது கட்சியில் இணைத்துக் கொண்டது. இதனால் சிவசேனா- பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த நிலையில் மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று (நவம்பர் 18) அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே மட்டுமே பங்கேற்றார்; அவரது சிவசேனா அமைச்சர்கள் யாருமே பட்னாவிஸ் கூட்டிய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் பட்னாவிஸ் கடும் கோபத்துடன் அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதலால் , கூட்டணி ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
