கோவையில் நண்பரை காப்பாற்ற சென்ற இளைஞருக்கு கத்தி குத்து – சிகிச்சை பலனின்றி மரணம்

Published On:

| By Mathi

Coimbatore Crime

கோவையில் நண்பரை காப்பாற்ற சென்ற நிலையில் கத்தி குத்துக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Crime Coimbatore

கோவை, சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன வேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் பிரசன்னா . இவருக்கு வயது 26. புகைப்பட நிபுணரான இவர் உணவு டெலிவரி செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்தார்.

பிரசன்னாவின் நண்பர் ஹேம்நாத். திருப்பூர் மாவட்டம் தானம் புதூரை சேர்ந்த ஹேம்நாத் அந்தப் பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். கடந்த 5ம் தேதி பிரசன்னா, ஹேமந்த், மற்றும் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்து மது அருந்தினர்.

அப்போது அவர்களிடம் இருந்த சிக்கன் தீர்ந்து விட்டது. இதனால் பிரசன்னாவும், சௌந்தர்ராஜனும் துடியலூர் சாலையில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு சிக்கன் வாங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதிகாலை 2 மணி என்று கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் சிக்கன் வேண்டுமா?

ஓட்டல் அருகில் 5 பேர் நின்று கொண்டு இருந்தனர். அங்கு வந்த பிரசன்னாவிடம் எதற்காக இந்த நேரத்தில் இங்கே வந்து இருக்கிறீர்கள் என்று கேட்டு உள்ளனர். அப்போது சிக்கன் வேண்டுமென்று பிரசன்னா கூறி உள்ளார்.

உடனே அவர்கள் இந்த நேரத்தில் சிக்கன் உங்களுக்கு வேண்டுமா? என்று கூறி பிரசன்னாவை வம்புக்கு இழுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதை பார்த்துக் கொண்டிருந்த சௌந்தரராஜன் அங்கிருந்து ஓடி சென்று ஹேமந்தை உதவிக்கு அழைத்து வந்து உள்ளார்.

சரமாரி தாக்குதல்

உடனே ஹேமந்த், பிரசன்னாவை காப்பாற்ற சென்று உள்ளார். அப்போது ஹேமந்தத்தையும் அவர்கள் தாக்கினர். இதனால் அவர்கள் அங்கு இருந்து தப்பிச் செல்ல முயன்று உள்ளனர். அப்போது 5 பேரும் தங்கள் கையில் வைத்திருந்த கத்தி போன்ற ஆயுதத்தால் ஹேமந்த் மற்றும் பிரசன்னாவை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் ஹேமந்த் மற்றம் பிரசன்னா தலை, முகத்தாடை, கை மற்றும் கால்களில் வெட்டு விழுந்தது. அவர்கள் வலியால் அலறினர். உடனே தாக்குதல் நடத்திய 5 பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர். கத்தி குத்தில் காயம் அடைந்த பிரசன்னா, ஹேம்நாத் ஆகியோர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இச்சம்பவம் குறித்து பிரசன்னா சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ஆய்வாளர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து ஹோட்டல் உரிமையாளர் ஹரி பிரசாத், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சந்திரகுமார், சின்ன செட்டிபாளையம் கிளி பிரவீன், நல்லம்பாளையம் செல்வம், ஆகிய 4 பேரை கைது செய்தார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமந்த் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சரவணம்பட்டி போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share