சூர்யாவின் 45வது படமாக வெளியாகவிருக்கிறது ‘கருப்பு’. ஆர்ஜே பாலாஜி இயக்கியிருக்கிற இந்த படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. cricketer ashwin in suriya karuppu teaser
‘எதற்காக இன்று வெளியானது’ என்று கேட்டால், அதற்கும் சூர்யாவைத்தான் அப்படக்குழு கைகாட்டும். காரணம், இன்று சூர்யாவின் 50வது பிறந்தநாள். அதனைக் கொண்டாடும்விதமாக வெளியாகியிருக்கும் இந்த டீசர் நமக்குச் சில ஆச்சர்யங்களைப் பரிசளிக்கிறது.
“கற்பூரம் காட்டி கண்ணுல ஒத்திக்கிற சாந்தமான சாமி இல்ல. மனசார வேண்டிக்கிட்டு மொளகா அரைச்சா உடனே நியாயம் கொடுக்கிற முரட்டுத்தனமான சாமி” என்ற ‘பில்டப்’புடன் கருப்பசாமி சிலையைக் காட்டி, பின்னர் சூர்யாவைக் காட்டுகிறது இந்த டீசர். அவரும் அதே போன்றதொரு முறுக்கு மீசையோடு உலா வருகிறார். ஆளுயுர அரிவாளைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ‘போஸ்’ கொடுக்கிறார். அதுவே இப்படத்தில் ‘ஆக்ஷன்’ பிரதானம் என்பதைச் சொல்லிவிடுகிறது.
விக்ரம் மோர் மற்றும் அன்பறிவ் இதில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கின்றனர்.
“என் பேரு சரவணன். எனக்கு இன்னொரு பேரு இருக்கு..” என்று தனது ரசிகர்கள் தியேட்டரில் ஆரவாரம் எழுப்புகிற வகையிலான வசனங்களும் இதிலுண்டு என ‘சாம்பிள்’ காட்டியிருக்கிறார் சூர்யா.
இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக வருவது போலவே, இயக்குனர் ஆர்ஜே பாலாஜியும் இதில் நடித்திருப்பதைக் காட்டுகிறது டீசர்.
இதனைப் பார்த்தவர்களில் சிலர், ‘கருப்பசாமிக்கு மிளகாய் அரைச்சு பூசுற வழக்கம் எங்க இருக்கு’ என்று தேடுவது நிச்சயம்.
ஷங்கர், பேரரசு படங்களில் வரும் ஹீரோயிசத்துடன் கொஞ்சம் ‘காந்தாரா’ தனத்தை கலந்தால் ‘கருப்பு’ தயார் என்பதாக இருக்கிறது இந்த டீசர். படம் அந்த வரையறையை எத்தனை உயரம் தாண்டுகிறது என்றறியும் எதிர்பார்ப்பு நிச்சயம் ரசிகர்களிடத்தில் இருக்கும்.
இந்த டீசரில் ‘எழுத்து & இயக்கம் – ஆர்ஜேபி’ என்று ஆர்ஜே பாலாஜியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
இதில் ‘எழுத்தாளர்கள்’ என்று நான்கு பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் முதலாவதாக இருப்பது ‘அஸ்வின் ரவிச்சந்திரன்’ என்ற பெயர்.
ஆர்ஜே பாலாஜியின் நட்பு வட்டத்தில் இருப்பவர் அஸ்வின் என்பது தெரிந்த விஷயம் தான். போலவே, தமிழில் வரும் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றை அவர் ரசிப்பார் என்பதும், அது பற்றி ஆர்ஜே பாலாஜியிடம் விவாதிப்பார் என்பதும் ஏற்கனவே வெளியான இருவரது பேட்டிகளில் தெளிவாகியிருக்கிறது. அந்த வகையில், இந்த படத்தின் கதை விவாதத்தில் அஸ்வின் ரவிச்சந்திரன் இடம்பெற்றிருப்பது தெளிவாகியிருக்கிறது.
இனி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் சினிமாவில் நுழைகிறார் என்ற தொனியில் செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்..!