இந்தியாவில் அதிக குற்றவாளிகள் (2000) அடங்கிய விசாரணை இதுதான் என்றும், அனைவரையும் நிறுத்த ஒரு கிரிக்கெட் மைதானமே தேவைப்படும் என்று செந்தில் பாலாஜி மீதான வழக்கில் தமிழக அரசை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, ”இரண்டு வழக்குகளில் மட்டும் லஞ்சம் கொடுத்ததாக சுமார் 2000-2500 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் என்ன? ஒவ்வொரு வழக்கிலும் 1000 பேரைக் குற்றஞ்சாட்டினால் விசாரணையை எப்போது முடிப்பது? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை தாமதப்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது. அமைச்சரின் வாழ்நாளில் விசாரணைகள் முடிவடையாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் முயற்சியாக உள்ளது” என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் செந்தில்பாலாஜி பணமோசடி வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று (ஜுலை 30) மீண்டும் வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ”தங்கள் பேரக்குழந்தைகளுக்கு வேலை வாங்கித் தர நகைகளை அடகு வைத்த பாட்டிகளும் கூட இந்த வழக்குகளில் குற்றச்சாட்டப்பட்டவர்களாக கருதப்படுகிறார்கள். அமைச்சர், அவரது சகோதரர், அவரது தனிப்பட்ட உதவியாளர் மற்றும் லஞ்சம் கேட்ட முக்கிய குற்றவாளிகளை அரசு அடையாளம் கண்டு, மீதமுள்ளவர்களை சாட்சிகளாகக் கருத வேண்டும்” என்று அவர் பரிந்துரைத்தார். மேலும் இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிப்பதற்கும் அவர் முன்மொழிந்தார்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் ”ஒரு வருடமாக விசாரணையை விசாரித்து வந்த நீதிபதி அபய் ஓகா, சிறப்பு அரசு வழக்கறிஞருக்கான கோரிக்கையை நிராகரித்தார். மாநிலத்திற்கு வெளியில் இருந்து ஒருவரை நியமிப்பது அரசுக்கு ஒரு எதிர்மறையான தோற்றத்தை உருவாக்கக்கூடும்” என்று சிங்வி வாதிட்டார்.
ஒரு கிரிக்கெட் மைதானமே தேவைப்படும்!
அப்போது, ”இந்த இரண்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000ஐ நெருங்கக்கூடும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரையும் நேரில் விசாரிப்பது கடினமாக இருக்கும். விசாரணையில் அனைவரையும் உள்ளடக்க ஒரு கிரிக்கெட் மைதானமே தேவைப்படும். லஞ்சம் கொடுத்தவர்கள் குற்றவாளிகள் என்றாலும், அவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் மீது வழக்குத் தொடுப்பது மிகுந்த தாமதத்தை ஏற்படுத்தும். எனவே விசாரணையை விரைவுபடுத்த கிளப்பிங்கே ஒரே தீர்வாக இருக்கலாம்” என நீதிபதி காந்த் குறிப்பிட்டார்.
சுக்கான் இல்லாத கப்பல்!
தொடர்ந்து அபிஷேக் மனு சிங்வியைப் பார்த்து நீதிபதி பாக்சி, “இந்த வழக்கின் திட்டம் என்ன என்பதை நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் உங்களிடம் கேட்கிறோம். 2000க்கும் மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள், 500க்கும் மேற்பட்ட சாட்சிகள் கொண்ட இந்த வழக்கு ’சுக்கான் இல்லாத கப்பல்’ போன்று தெரிகிறது.
வழக்கில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் இருப்பதால், இது இந்தியாவில் அதிகம் பேர் அடங்கிய விசாரணையாக இருக்கும்.
சாட்சிகளின் குறைந்தபட்ச குற்றத்தின் அளவு மற்றும் பிரதான குற்றத்தின் அளவு குறித்து நீங்கள் பார்க்க வேண்டும் என்று நாங்கள் ஒரு ஆலோசனையை வழங்காவிட்டால், நீங்கள் எப்படி கிளப்பிங்கை அடைவீர்கள்? அது ஏன் எங்களிடமிருந்து வர வேண்டும்? இந்த எண்ணம் உங்கள் வழக்கறிஞரின் மனதில் ஏன் தோன்றவில்லை” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “முதலில் செந்தில்பாலாஜி பண மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியல் எங்களுக்கு வேண்டும். மேலும் எத்தனை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் ஒன்றுடன் ஒன்று சேர்கிறார்கள் என்பதைப் பார்க்க சாட்சிகளின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் விளக்கங்களையும் தமிழக அரசு முழுமையாக வெளியிட வேண்டும். விசாரணை எப்போது முடிக்கப்படும் என்ற காலக்கெடுவைக் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.