சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொலை மிரட்டல் – சிபிஎம் கண்டனம்!

Published On:

| By Minnambalam Desk

CPM condemns the Death threat to mp Su. Venkatesan

பஹல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த சு.வெங்கடேசன் எம்.பி-க்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சு.வெங்கடேசன். மத்திய அரசின் கொள்கைகளால் தமிழகம் வஞ்சிக்கப்படுவது குறித்து தொடரச்சியாக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தனது கருத்துகளை உரத்த குரலில் வெளிப்படுத்தி வருகிறார்.

ADVERTISEMENT

யார் பொறுப்பேற்பது?

இந்நிலையில் நேற்று (ஜூலை 28) பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதம் மக்களவையில் நடந்தது. இந்த விவாதத்தின் போது பேசிய சு.வெங்கடேசன், “பஹல்காம் தாக்குதல் நடந்த போது ஒன்றரை மணிநேரம் கழித்துதான் அரசுக்கு தகவலே கிடைத்திருக்கிறது. இது ராணுவத்தின் தோல்வி, சிஆர்பிஎப்பின் தோல்வி, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் தோல்வி – இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது?

நீங்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் நடந்த சம்பவங்களுக்கு நேரு முதல் மன்மோகன்சிங் வரை பொறுப்பேற்க சொல்கிறீர்கள். இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்பது?

ADVERTISEMENT

பஹல்காம் தாக்குதலின் போது பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார்; அங்கிருந்து பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மோடி, நேராக பஹல்காம் செல்வார்.. காஷ்மீர் செல்வார் என எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் பீகார் தேர்தல் பிரசாரத்துக்குதான் சென்றார். எங்கள் எல்லோரது இதயங்களிலும் தேசம் இருந்தது. ஆனால் உங்கள் இதயங்களில் தேர்தல் இருந்தது என மத்திய அரசு குறித்து கடும் விமர்சனங்களை நாடாளுமன்றத்தில் முன் வைத்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் பேசிய நிலையில், நேற்று இரவு அவருக்கு தெலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் பேசிய நபர் “நீ எப்படி பிரதமர் மோடியை விமர்சித்து பேசலாம்? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது. நீ தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்” என்று கொலை மிரட்டல் விடுத்ததுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்!

இந்த கொலை மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் “சமூக விரோதியின் இந்த கொலை மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக நேற்று இரவே (28.7.2025) தமிழக டிஜிபிக்கு இணையம் மூலம் சு.வெங்கடேசன் புகார் அனுப்பியுள்ளார்.

இந்த புகாரை ஏற்றுக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்ப வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share