நல்லகண்ணு உடல்நிலை எப்படி உள்ளது? மு.வீரபாண்டியன் விளக்கம்

Published On:

| By Mathi

RNK Veerapandian

முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் இன்று பிப்ரவரி 25-ந் தேதி செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணிக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஏற்கனவே சொன்னது போல், தன் வாழ்வின் பெரும்பகுதியை நாட்டுக்காக, எளிய மக்களுக்காக அர்ப்பணித்த அந்த மகத்தான தலைவர் இயற்கையோடு போராடுகிறார். இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு செய்திகள் வெளியாகிறது. அவை உண்மை அல்ல. தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் குறித்த மருத்துவமனையின் அறிக்கை வெளியான பிறகு, அதிகாரப்பூர்வமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி அறிவிப்புகளைச் செய்யும்.

அதுவரை எத்தகைய தகவலையும் யாரும் நம்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் அனைவரையும் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம். தமிழ்கூறும் நல்லுலகம் அவர் மீது கொண்டிருக்கிற அன்பு அனைவரும் அறிந்தது. எனினும் இது மருத்துவம் சம்பந்தப்பட்டது, உயிர் சம்பந்தப்பட்டது. மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிக்கை வருகிற வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காத்திருக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான அறிக்கை வருகிற வரை தமிழ்கூறும் நல்லுலகம் காத்திருக்கும் என்கிற நம்பிக்கையைப் பதிவு செய்து கரங்குவித்து முடித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் அதை அறிவிக்க வேண்டியது மருத்துவத்துறை. எனவே அதுதான் அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக இருக்கும். கட்சி என்கிற முறையில் அந்த அறிவிப்பு வந்த பிறகுதான் நாங்கள் வெளியிட முடியும். அதுவரை அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

ஒன்றை இந்த நேரத்தில் சொல்ல அனுமதிக்க வேண்டும். மிகச்சிறந்த மருத்துவர்கள் தங்கள் சக்தி முழுவதையும், திறன் முழுவதையும் பயன்படுத்திப் போராடுகிறார்கள். அவருக்கு மட்டுமல்ல, ஒரு கட்சியின் பொறுப்பு வாய்ந்த பொறுப்பாளர் என்கிற முறையில் நீங்கள் சொல்ல அனுமதிக்க வேண்டும். அவர் கட்சியின் பெரிய தலைவர், நாடறிந்தவர். ஆனால் அவருக்கு அருகில் இருந்து சிகிச்சை பெறுகிறவர்கள் எளிய மக்கள், கிராமங்களிலிருந்து வருகிற முன்பின் தெரியாத முகம் தெரியாத எளிய மக்களுக்கும் அதே சிகிச்சைப் பிரிவு, நல்லகண்ணுவுக்கு எவ்வாறு போராடுகிறார்களோ அதே போன்று அந்த எளிய மக்களுக்கும் மருத்துவர்கள் போராடுவதை நினைக்கிற பொழுது தமிழ்நாட்டில், இந்தியாவில் இதுபோல் ஒரு மருத்துவமனை இல்லை, இதுபோல் ஒரு மருத்துவர்கள் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. இவ்வாறு மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share