திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்னும் சற்று நேரத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார்.
திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை விட கூடுதலான இடங்களைக் கேட்டது சிபிஎம். இதனை திமுக ஏற்கவில்லை.
இதனையடுத்து கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதைப் போலவே 6 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் சிபிஎம் உறுதியாக இருக்கிறது. திமுக குழுவுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது சிபிஎம். இதன் பின்னர் சிபிஎம் கட்சியின் அவசர அரசியல் செயற்குழு கூட்டம் நேற்று சுமார் 13 மணிநேரம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் 6 இடங்களை கேட்டுப் பெறுவது; 6 இடங்களை திமுக ஒதுக்காத நிலையில் அடுத்ததாக என்ன முடிவு எடுப்பது என்பது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இன்று பகல் 1 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அழைப்பு வந்துள்ளது. இந்த சந்திப்புக்குப் பின்னர் தொகுதி உடன்பாடு சுமூகமாக முடிவுக்கு வரும் என கூறினார்.
