டெல்லி கார் வெடிப்பில் ஈடுபட்ட நபர்கள் கோவைக்கு வந்து சென்றுள்ளார்களா என மத்திய உளவுப்பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் , கோவை போலீசார் தகவல் கேட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலில் நவம்பர் 10ம் தேதியன்று மாலை 6.52 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு மோடி தலைமையிலான அமைச்சரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) விசாரித்து வருகிறது. ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி., மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி.கள் அடங்கிய 10 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை NIA அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு NIA ஏடிஜி விஜய் சாகரே தலைமை வகிக்கிறார்.
இது தொடர்பான விசாரணையில் மருத்துவர்கள் குழுவாக இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் டெல்லியில் வெடித்து சிதறிய காரை ஓட்டி வந்தவர் டாக்டர் உமர் முகமது நபி என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் கார் வெடித்த பகுதியில் இருந்த உடல் பாகங்களை சேகரித்து DNA பரிசோதனை மேற்கொண்டதில் காரை ஓட்டி வந்தவர் உமர் முகமது நபி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இது தற்கொலை படை தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளரான ஜமிஷா மூபின், டெல்லி பாணியில் கோவையில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இந்நிலையில் தற்போது டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கும், கோவைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா
என கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகர காவல் துறை இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (IB) அதிகாரிகளிடம் தகவல் கேட்டுள்ளனர். மருத்துவர்களாக இணைந்து செய்துள்ள இந்த சதி செயலில், அவர்களுக்கும் கோவை பகுதிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கோவை வந்து சென்றனரா? என்ற தகவலையும் கேட்டுள்ளனர்.
கோவையில் 2022 ம் ஆண்டு நடந்த கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து, கோவையில் அடிப்படைவாத எண்ணம் கொண்ட 140க்கும் மேற்பட்டோரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை போலீசார் இதுகுறித்த தகவலை திரட்டும் பணியில் இறங்கி உள்ளனர்.
