ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் இன்று (ஜூலை 31) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் திரையுலகில் 1976ஆம் ஆண்டு முதல் பலப் படங்களை தயாரித்து வருகிறது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். இதனை இயக்குநர் ராம நாராயணன் நிறுவி நிர்வகித்து வந்தார். அவரது மறைவுக்கு பின் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அவரது மகனும் தயாரிப்பாளருமான என். ராமசாமி நிர்வகித்து வருகிறார்.
கடைசியாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் வெளியாகியிருந்தது.
அதன்பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபடாத தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மீது, கடந்த 2022ஆம் ஆண்டு மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மாலிக் ஸ்டிரிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தமிழ்நாட்டு கிளை நிர்வாக இயக்குனர் ராஷிக் அகமது கனி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, பேட்ட திரைப்படத்தின் வெளிநாட்டு பதிப்புரிமை தருவதாகக் கூறி 15 கோடி மோசடி செய்ததாக இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமி மீது ரூ.26 கோடி காசோலை மோசடி வழக்கில் என்.ராமசாமிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவரை அக்டோபர் 3ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.