பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 14) உத்தரவிட்டது.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததது.
உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் என்பதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த வந்தனர்.
இதுகுறித்து பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலா பாக்சி தலைமையிலான அமர்வு முன் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், நீக்கப்பட்டதற்கான காரணங்கள், மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்பதையும் விரிவாக குறிப்பிடும் அறிக்கையை வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் மக்களவை தேர்தலின் போது மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் பீகாரில் நீக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.