பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 4) உத்தரவிட்டது.
தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாடலிங் மீரா மிதுன். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, இயக்குநர் சேரன் மீது முன்வைத்து அவதூறுகள் காரணமாக ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
தனது சமூகவலைதளங்களில் விஜய், சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் குறித்து அவதூறுகளை கருத்துகளை அவர் வெளியிட்டதும் சர்ச்சையானது.

அதுமட்டுமின்றி, ”பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். அதனால் தான் அவரை அனைவரும் கடுமையாக விமர்சிக்கின்றனர். அவர்களை ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும்” என கடந்த 2021ஆம் ஆண்டு மீரா மிதுன் கூறிய கருத்து சினிமாவைத் தாண்டி அரசியல் களத்திலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் மீரா மிதுன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
அதன்படி வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்யத் தூண்டுதல், ஜாதி மதம் குறித்து பேசி கலகத்தை உருவாக்குதல் என 7 பிரிவுகளில் மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு- சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினிலும் வெளியே வந்தார்.

எனினும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீராமீதுன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர் போலீசாரால் கைது செய்யப்படாமல் இருந்தார்.
இந்த நிலையில் தனது மகள் மீராமிதுன் டெல்லியில் இருப்பதாகவும், அவரை மீட்க வேண்டும் எனவும் அவரது தாயார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், “நீதிமன்ற உத்தரவுபடி, சென்னை மாவட்ட சட்ட ஆணையக்குழு மூலமாக டெல்லியில் உள்ள சட்ட ஆணையக் குழுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து டெல்லி போலீசாரால் பிடிக்கப்பட்டு, அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ”டெல்லியில் உள்ள நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.