பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர். இந்நிலையில் இந்த தம்பதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 30) விவாகரத்து வழங்கி உள்ளது.
ஜிவி பிராகாஷ் தனது பள்ளி தோழி சைந்தவியை காதலித்து கடந்த 2013ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்த பல்வேறு பாடல்களை சைந்தவி பாடி இருந்தார். திரைத்துறையில் கீயூட் தம்பதியாக இருந்த ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற முடிவு எடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து இருவரும் முடிவெடுக்க நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கியது.
6 மாத காலம் முடிந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிபதி செல்வ சுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோா் நேரில் ஆஜராகினர். தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் தனது குழந்தை அன்வி, அவரது அம்மா சைந்தவி பாரமரிப்பில் இருப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவருக்கும் விவகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.