சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் திட்டங்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஓஎன்ஜிசி எண்ணெய் தளவாடங்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், அப்போதைய கிராம ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட 22 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் மீது விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மற்றவர்கள் மீதான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில் 18 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பி.ஆர்.பாண்டியன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.
“தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கவேண்டும்” என தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார் பி.ஆர்.பாண்டியன்
இந்த மனு இன்று (டிசம்பர் 19) நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ‘விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட பி.ஆர்.பாண்டியனுக்கு13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 18 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர்’ என்று வாதம் முன்வைத்தார்.
இதை கேட்ட நீதிபதி பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.
இதனால் சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரும் சிறையிலிருந்து வெளியே வரவுள்ளனர்.
