டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Court condemns government in TASMAC case
கடந்த மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மதுபான ஆலைகளில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறியது.
அமலாக்கத் துறையின் செயல்பாடுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு சார்பில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் டாஸ்மாக் சார்பில், “ரெய்டின் போது பெண் ஊழியர்களை கூட வீட்டுக்கு அனுப்பாமல் நள்ளிரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சிறை பிடித்து வைத்திருந்தனர்” என்று கூறியது.
இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
தொடர்ந்து அமலாக்கத் துறை 47 பக்க பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் நாங்கள் டாஸ்மாக் ஊழியர்கள் யாரையும் துன்புறுத்தவில்லை என்று பதிலளித்திருந்தது. இதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும் டாஸ்மாக் நிறுவனத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் எம்.எஸ். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் ஆகியோர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில் , உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டாஸ்மாக் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தசூழலில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “அமலாக்கத் துறைக்கு எதிரான டாஸ்மாக் வழக்கை மாற்ற அரசு நினைப்பது ஏன்? பொது நலனுக்காகவா… சில டாஸ்மாக் அதிகாரிகளை பாதுகாக்கவா? அதற்காகத்தான் ரிட் மனுக்களை தாக்கல் செய்தீர்களா?
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்ட அரசு, வழக்கை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது ஏன்? இது இந்த உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக உங்களுக்கு தெரியவில்லையா?
நீதிமன்றத்திடமாவது நேர்மையாக இருக்க வேண்டும். ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால் இங்கு வழக்கை பட்டியலிட்டிருக்க மாட்டோம்” என்று கண்டனம் தெரிவித்தனர்
இதற்கு அரசு தரப்பில், மாநில அரசின் உரிமைக்காகவே வழக்குத் தொடரப்பட்டது என்று பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டால், வாதங்களை முன்வைக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர். Court condemns government in TASMAC case
