தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 30) அமுதா ஐஏஎஸ், டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்து, வீடியோ வெளியிட்டு நேரம் வாரியாக விளக்கமளித்தனர்.
அந்த வீடியோவில் முதலில், “வேலுசாமிபுரத்தில் 12 மணிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் மக்களை சந்திக்கிறார்” என்று புஸ்ஸி ஆனந்த் பேட்டி கொடுப்பது இடம் பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து விஜய் நாமக்கலில் பேசுவதாக சொன்ன நேரம் 8.45, கரூரில் பேசுவதாக சொன்ன நேரம் 12 மணி. ஆனால் சென்னையில் இருந்து கிளம்பியதே 8.45 மணிக்குதான் என்றும் அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் தொண்டர்கள் கூட்ட நெரிசலால் கடை மேல் ஏறியது, கூரையை பிய்த்துக்கொண்டு வெளியே வந்தது, போலீஸ் விஜய்க்கு நன்றி சொல்வது ஆகியவையும் அதில் உள்ளது.
கேள்வி: தவெக கேட்ட இடத்துக்கு மாறாக இந்த இடத்தை ஒதுக்கியதாக சொல்கிறார்கள்? வேண்டுமென்றே குறுகலான வேலுசாமிபுரம் பகுதியை காவல்துறை ஒதுக்கியதா? அது குறுகிய சந்து என்று வெளியிடும் கருத்து சரியா? பரந்த இடம் இருந்தும் மக்கள் நெரிசலை ஏற்படுத்தக்கூடிய இடம் வழங்கப்பட்டதா?
27ஆம் தேதி மீட்டிங் இருக்கிறது என்று 7 இடங்களை குறிப்பிட்டு அனுமதி கேட்டிருந்தார்கள். 25ஆம் தேதி அதே இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எந்த சிரமமும் இல்லாமல், மீட்டிங்கை நடத்திவிட்டு சென்றார். அதில் 10 ஆயிரம் முதல் 15ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டனர். எனவே அக்கட்சி சார்பாக வேலுசாமிபுரத்தில் இடம் கொடுங்கள் என்று கடிதம் கொடுத்தனர்.
முதலில் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியை கேட்டார்கள். அங்கு பாரத் பெட்ரோல் பங்க் உள்ளது. மேலும் அருகிலேயே வடிகால்கள் உள்ளதால் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்படவில்லை.
அடுத்த தேர்வாக உழவர் சந்தை பகுதியை கேட்டிருந்தார்கள். இந்த பகுதி என்பது ஒரு முனிசிபல் ரோடு. தோராயமாக இந்த சாலையின் அகலம் 30 அடிதான் இருக்கும். அதுவே வேலுசாமிபுரத்தில் அனுமதி கொடுக்கப்பட்ட இடம் தேசிய நெடுஞ்சாலை. அது 60 அடிக்கும் மேல் அகலம் கொண்டது. இருபக்கமும் செல்லலாம் என்பதால் அவ்விடத்துக்கு ஒப்புதல் கொடுத்தோம்.
கேள்வி : உளவுத்துறையால் எத்தனை பேர் வருவார்கள் என முன்கூட்டியே கணிக்கமுடியவில்லையா?
அவர்கள் கடிதம் கொடுத்த போது அதில், 10 ஆயிரம் பேர்தான் என்று சொல்லியிருந்தார்கள். அதைவைத்துதான் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியும், ஆனால் திருச்சி, நாகையில் நடந்த கூட்டத்தின் போது அதிகம் பேர் வந்திருந்ததால், போலீஸ் 20000 பேர் வருவார்கள் என்று கணித்து பாதுகாப்பு வழங்கினர்.
பொதுவாக 50 பேருக்கு ஒரு போலீஸ் என்று பாதுகாப்பு வழங்குவோம். ஆனால் இங்கு 20 பேருக்கு ஒரு போலீஸ் என 500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்கனவே வேலுசாமிபுரத்தில் 10000 பேர் திரண்டிருந்தனர். அக்கட்சித் தலைவர் விஜய் வண்டி வந்ததும், அதற்கு பின்னால் வந்த கூட்டம் சேர்ந்து இப்படி நெருக்கடி உண்டானது. 20000க்கும் அதிகமானோர் கூடிவிட்டனர்.