ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் பெயர் தவறுதலாக இருந்தாலோ அல்லது பிறந்த தேதி பொருந்தவில்லை என்றாலோ உங்கள் PF தொகையை எடுக்கும்போது பிரச்சனை ஏற்படும். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உங்கள் பெயர், பிறந்த தேதி, திருமண நிலை அல்லது தேசியம் போன்ற தகவல்களை திருத்துவதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் உங்கள் EPF பதிவை சில நிமிடங்களில் சரிசெய்யலாம். உங்கள் EPF சுயவிவரத்தில் பெயர், பிறந்த தேதி, திருமண நிலை, பெற்றோர் பெயர் அல்லது தேசிய இனம் போன்ற மாற்றங்களைச் செய்யலாம். உறுப்பினர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் பதிவுகளைப் புதுப்பிக்க EPFO தெளிவான நடைமுறைகளை வகுத்துள்ளது.
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உங்கள் பெயர், தேசிய இனம், பெற்றோரின் பெயர்கள், திருமண நிலை, பணியில் சேர்ந்த தேதி மற்றும் பணியில் இருந்து விலகிய தேதி ஆகியவற்றை எந்த ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யாமல் மாற்றலாம்.
EPFO வழிகாட்டுதல்களின்படி, உங்கள் தேசிய இனத்தை மாற்ற இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே முடியும்: தேசிய இனப் பிரிவு காலியாக இருந்து, அதை இந்தியாவாக மாற்ற விரும்பினால் மாற்றலாம். அல்லது இந்தியாவிலிருந்து சர்வதேசத்திற்கு மாற்ற விரும்பினால் மாற்றலாம்.
பிஎப் நம்பர் (UAN) அக்டோபர் 1, 2017க்கு முன்பு செயல்படுத்தப்பட்டு, ஆதார் சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. UAN அக்டோபர் 1, 2017க்கு முன்பு செயலில் இருந்தால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மாற்றங்களைச் செய்யலாம். ஆனால் இதற்கு நிறுவனத்தின் முதலாளியின் ஒப்புதல் கையொப்பம் தேவைப்படும்.
ஒருவேளை UAN ஆதார் உடன் இணைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருந்தால், உறுப்பினர் கூட்டு அறிவிப்பை பூர்த்தி செய்து முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். முதலாளி தனது EPFO கணக்கிலிருந்து அதை பதிவேற்றம் செய்வார். அதன் பிறகு ஆவணங்கள் EPFO அலுவலகத்தை அடையும்.
ஒருவேளை உங்கள் முந்தைய நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டிருந்தால், கூட்டு அறிவிப்பில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி கையொப்பமிட வேண்டும். உதாரணமாக, ஒரு கெசட்டட் அதிகாரி, நோட்டரி பப்ளிக், நாடாளுமன்ற உறுப்பினர் (MP), அஞ்சல் அதிகாரி அல்லது கிராமத் தலைவர் போன்றோர். தேவையான ஆவணங்களை EPFO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
EPF கணக்கில் பெயர் அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களில் பிழை இருந்தால், அதை சரிசெய்வது மிகவும் முக்கியம். ஏனெனில், PF தொகையை எடுக்கும்போது இது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். எனவேதான் EPFO இந்த செயல்முறையை மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
