மாணவி லாவண்யா வழக்கு: மதமாற்றம் என வதந்தி பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா – ஆளூர் ஷாநவாஸ் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

மைக்கேல் பட்டி பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என சிபிஐய உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா என விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் காட்டமாக

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி லாவண்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணிச்சுமை ஆகியவை தற்கொலைக்கு காரணம் என்று முதலில் தகவல்கள் வெளியான நிலையில், மதமாற்றமே காரணம் என பாஜக மற்றும் விஹெச்பி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மாணவி லாவண்யாவின் தற்கொலை சம்பந்தமாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் விடுதி காப்பாளரான சகாயமேரி, மாணவிகளை விடுதியின் கணக்கு போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தி உள்ளார். இதில் தொடர்ந்து விரைவாக வேலையை முடிக்குமாறு அழுத்தம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அன்று, பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு வரும்போது கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சகாயமேரி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அன்றைய தினம் லாவண்யா திடீரென வாந்தி எடுத்தபோது, அங்கு முதலுதவி செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து அன்று இரவு எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் மாணவி தூங்கச் சென்றார்.

அடுத்த நாள் லாவண்யாவின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்து, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் லாவண்யாவை வீட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில், தொடர்ச்சியாக லாவண்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி வயிறு வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு வந்த நிலையில், பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவி விஷம் அருந்தி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, என்ன விஷம் அருந்தினார் என்பதை லாவண்யா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மாணவி பேசிய வீடியோவில், விடுதி காப்பாளர் சகாயமேரி தன்னையும் பிற மாணவிகளையும் விடுதி சம்பந்தமான வேலைகளை கொடுத்து அழுத்தம் கொடுத்ததாக பேசி உள்ளார். மதமாற்றம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாஜிஸ்ட்ரேட் முன்பாக அளித்த வாக்குமூலத்திலும், விடுதி வேலைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் கடந்த 2019 முதல் மைக்கேல் பட்டி பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்த போதும், யாரும் மதம் மாறவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசாரணையில் மைக்கேல் பட்டி பள்ளியில் லாவண்யா உள்ளிட்ட யாரையும் மதமாற்றத்துக்கு உட்படுத்த முயற்சி நடக்கவில்லை என்பது சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜக தலைவராக அண்ணாமலை செயலாற்றிய காலத்தில் அவர் கிளப்பிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று இந்த மைக்கேல் பட்டி பிரச்சனை. அதை வைத்துக்கொண்டு மிகப்பெரிய அளவுக்கு தமிழ்நாட்டில் மதவாத அரசியலை முன்னெடுப்பதற்கு முயன்றார்கள். இந்தப் பிரச்சனை மட்டுமல்ல, அந்தக் காலத்தில் அவர் தலைவராக இருந்த காலத்தில் அன்றாடம் செய்தியாளர்களை சந்திப்பதும், ஒரு அணுகுண்டை போடுவதும், ஒரு சர்ச்சையை கிளப்புவதும், அதன் மூலம் தமிழ்நாட்டினுடைய விவாத களத்தை அந்தத் திசையில் மாற்றுவதுமாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

அபாண்ட பழிகளையும், அவதூறுகளையும் முன்வைத்து தமிழ்நாட்டு அரசியல் களத்தை திசை மாற்ற முடியும் என்று அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவை ஒவ்வொன்றும் காலத்தால் பொய்யாக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் இந்த மைக்கேல் பட்டி பிரச்சனை.

ஒரு கிருத்தவ கல்வி நிறுவனத்தில் மத மாற்றம் செய்வதாகக் கூறி ஒரு அபாண்ட பழியைச் சொல்லி, அதன் மூலம் அந்தச் கல்விச் சேவை ஆற்றி வரக்கூடிய அந்த நிறுவனத்தைச் சார்ந்த ஆசிரியர் பெருமக்களை எல்லாம் கைது செய்ய வைத்து, அந்தக் கல்வி நிறுவனத்திற்கே மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்து, தமிழ்நாடு முழுவதும் இப்படி சிறுபான்மையினர், குறிப்பாக கிருத்தவர்கள் நடத்தக்கூடிய பள்ளிக்கூடங்களில் மத மாற்றம் நடைபெறுகிறது என்கிற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். அது அனைத்தும் பொய் என்பதை இன்றைக்கு மையப் புலனாய்வுத் துறையே தெளிவுபடுத்திவிட்டது.

ஒரு மாநில அரசு விசாரித்து சொல்லியிருந்தால் அதுக்கும் இவர்கள் ஒரு காரணத்தைக் கற்பிப்பார்கள். ஆனால் இன்றைக்கு இதை விசாரித்து அறிக்கை கொடுத்திருப்பது இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மையப் புலனாய்வுத் துறை சிபிஐ.

பிஜேபி முன்னெடுக்கும் அரசியல் எப்படிப்பட்ட பித்தலாட்டு அரசியல் என்பது இன்று நிரூபணமாகி உள்ளது. இதைத்தான் திருப்பரங்குன்றத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி களத்தை திசை திருப்புகிறார்கள். திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக எந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறதோ அந்த இடத்தில் இந்த முறையும் ஏற்றப்பட்டுவிட்டது. ஆனால் தீபம் ஏற்றுவதற்கே ஏதோ அச்சுறுத்தல் வந்துவிட்டது போலவும், இந்து மக்களின் உரிமை பறிபோய்விட்டது போலவும், இந்தத் திமுக ஆட்சி வந்து இந்துக்களுக்கு எதிராக இருப்பது போலவும் ஒரு தோற்றத்தை கிளப்பி அதற்கு நீதிமன்றத்தை துணைக்கு அழைத்து பிஜேபி எப்படிப்பட்ட ஒரு அரசியலை முன்னெடுக்கிறது என்பதை பார்க்கிறோம்.

அதில் எப்படி இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி பாஜக ஒரு அரசியலை முன்னெடுக்கிறதோ அதைத் தான் மைக்கேல் பட்டி விஷயத்திலும் முன்னெடுத்தார்கள். அதுதான் டிஎம்கே பைல்ஸ் என்று ஊழல் குற்றச்சாட்டை சொல்லி ஒரு மூவ்மெண்ட் முன்னெடுத்தார்கள். அவர்கள் சொன்னது எதுவுமே நிரூபணமாகவில்லை. பிஜேபி அம்பலப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் அவர்கள் இதுபோலச் சொல்லக்கூடிய பொய்கள் அங்கு உள்ள மக்களால் நம்பப்பட்டு பிஜேபிக்கு அது வாய்ப்பை கொடுத்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் அது சந்தி சிரிக்கும்.

பிஜேபி சொல்லக்கூடிய பொய்கள். அண்ணாமலை சொல்லக்கூடிய பொய்கள். பாஜக ஆர்எஸ்எஸ் சொல்லக்கூடிய அத்தனை பொய்களும் சந்தி சிரிக்கும் என்பதற்கு இன்றைக்கு சிபிஐ கொடுத்திருக்கிற இந்த அறிக்கை சான்று. இப்போது பிஜேபி மன்னிப்பு கேக்குமா? ஒரு கிருத்தவ கல்வி நிறுவனத்தின் மீது அபாண்ட பழியைச் சொன்னதற்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? அன்றைக்கு இப்படி மதமாற்றக் குற்றச்சாட்டைச் சொல்லி அந்த நிறுவனத்தை காயப்படுத்திய கிருத்தவ மக்கள் மீது அபாண்ட பழியைச் சொல்லிய பிஜேபி மன்னிப்பு கேக்குமா என்கிற கேள்வியை நான் வைக்கிறேன்.

கிருத்தவ கல்வி நிறுவனங்கள் மிஷனரிகள் சேவை மனப்பான்மையோடு கல்வி மற்றும் மருத்துவம் கொடுத்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பிஜேபி தர முடியுமா? அரசு கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய கல்வி மருத்துவத்தை கேள்விக்குறியாக்கக்கூடிய அளவுக்குச் சட்டங்களை, திட்டங்களை போடக்கூடிய ஒரு கட்சி தான் பிஜேபி. எல்லா மக்களுக்கும் கல்வி போய்ச் சேரக்கூடாது என்று தடுக்கிற கட்சி பிஜேபி.

எல்லா மக்களுக்கும் மருத்துவம் போய்ச் சேரக்கூடாது என்று தடுக்கும் கட்சி பிஜேபி. அப்படிப்பட்ட இடத்தில் எல்லா மக்களுக்கும் கல்வியையும் மருத்துவத்தையும் கொண்டுபோய் சாதி மத பாகுபாடுகள் இல்லாமல் சேர்க்கிற ஒரு அமைப்பின் மீது, ஒரு சமூகத்தின் மீது இப்படிப்பட்ட அபாண்ட பழியைச் சொல்லி மிகப்பெரிய தாக்குதலை நடத்திய அண்ணாமலையும் பாஜகவும் அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்பார்களா என்கிற கேள்வியை நான் எழுப்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share