இந்தியாவில் நாடாளுமன்றமே உயர்ந்தது என பலர் நினைக்கின்ற போதும் அரசியல் சாசனம்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். CJI BR Gavai
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள், மாநில அரசின் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரையறை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்தார். மேலும், நாடாளுமன்றமே அதிக அதிகாரம் கொண்டது எனவும் தொடர்ந்து ஜகதீப் தன்கர் பேசி வருகிறார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் பேசியதாவது: ஜனநாயகத்தின் அங்கமாக இருக்கும் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவை தொடர்பான விவாதங்கள் தொடருகின்றன. நாடாளுமன்றமே உயர்ந்தது என்கின்றனர்; நாடாளுமன்றமே அதிகாரம் படைத்தது என்கின்றனர். ஆனால் அரசியல் சாசனம்தான் உச்சபட்ச அதிகாரம் பெற்ற அமைப்பாகும். ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும், அரசியல் சாசனத்தின் கீழ்தான் இயங்குகின்றன.
நாட்டின் அரசியல் அமைப்பில் நாடாளுமன்றம் திருத்தங்களை செய்துவிடலாம். ஆனால் அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பை ஒருபோதும் மாற்றிவிட முடியாது. அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் எப்போதும் மதிக்கிறேன். இவ்வாறு தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்தார்.