தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும் என தவெக தலைவர் விஜய்யின் தந்தை திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
திருவாரூரில் இன்று ஜனவரி 28-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, ஆதரவு கொடுத்து காங்கிரஸ் தேய்ந்து போய்க் கொண்டே இருக்கிறது. காங்கிரஸ் இழந்துவிட்ட பவரை நாங்கள் (தவெக) கொடுக்கிறோம் என்று சொல்கிறோம். நாங்கள் இல்லை, விஜய் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். அந்த பவருக்கு நீங்கள் வந்தீர்கள் என்றால், காங்கிரஸ் மறுபடியும் வரலாற்றைத் தக்க வைத்துக் கொள்ளும் என கூறியிருந்தார்.
இது குறித்து அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ”நாங்க ஏற்கனவே பூஸ்ட்-ல்தான் இருக்கிறோம். எங்க தொண்டர்களைப் பாருங்க.. எல்லோரும் “பூஸ்ட்”-ல் இருக்காங்க.. ஏற்கனவே எங்க எல்லோருக்கும் ராகுல் காந்தி பூஸ்ட் கொடுத்து வெச்சிருக்காரு.. ஹார்லிக்ஸ் கொடுத்து வெச்சிருக்காரு..எங்களுக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம்.. நாங்க போன்விட்டா, ஹார்லிக்ஸ் எல்லாம் சாப்பிட்டுகிட்டு இருக்கோம்.. இருந்தாலும் பூஸ்ட் கொடுக்கிறோம் என்று சொன்னதற்காக எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நன்றி” என கூறியுள்ளார்.
தவெக- காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் திடீரென பேசியது தொடர்பாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, “கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து யாரும் பேச வரவில்லை.. அதனால் எஸ்.ஏ. சந்திரசேகரை காங்கிரஸ்- தவெக கூட்டணி தொடர்பாக பேசுமாறு விஜய் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. அதனால்தான் எஸ்.ஏ.சி. பேசினார்” என்கின்றனர்.
