கோவை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 12) பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனுடன் புகைப்படம் எடுக்க காங்கிரஸ் கட்சியினர் அதிக ஆர்வம் காட்டிய சம்பவம், பாஜகவினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். அந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விமானம் மூலம் இன்று கோவை வந்தார்.முன்னதாக, அவரை வரவேற்பதற்காக கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார்.
வானதி சீனிவாசனை அங்கு பார்த்த காங்கிரஸ் கட்சியினர், அவருடன் உற்சாகமாக புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். இதனிடையே, புகைப்படம் எடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டிய நிலையில், அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அந்தக் காட்சியைப் படம் பிடித்தனர்.
பத்திரிகையாளர்களை கவனித்த சிலர் வானதி சீனிவாசனுடன் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் பலரும் ஆர்வமுடன் வானதி சீனிவாசனுடன் புகைப்படம் எடுத்த காட்சி, அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இதை அங்கிருந்த பாஜகவினரும் சற்றே ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
